சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: பா.ஜனதா பெண் பிரமுகரின் ஜாமீன் மனு 3-வது முறையாக தள்ளுபடி
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான பா.ஜனதா பெண் பிரமுகரின் ஜாமீன் மனு 3-வது முறையாக தள்ளுபடி செய்து கலபுரகி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கலபுரகி மாவட்டத்தை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் திவ்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே 2 முறை ஜாமீன் கோரி கலபுரகி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்களை கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, 3-வது முறையாக தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி கலபுரகி மாவட்ட கோர்ட்டில் திவ்யா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஹேமாவதி முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணை இன்னும் தொடர்ந்து நடப்பதால், சாட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளதால் திவ்யாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஹேமாவதி உத்தரவிட்டுள்ளார். இதுபோல், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு கைதாகி உள்ள காங்கிரஸ் பிரமுகரின் சகோதரர் மகாந்தேஷ் பட்டீல், ஸ்ரீதர், அர்ச்சனா, சாவித்திரி, காளிதாஸ், மல்லிகார்ஜுன், சரண பசப்பா ஆகிய 7 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் 7 பேரின் மனுக்களையும் கலபுரகி மாவட்ட கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.