பா.ஜ.க. 2 இலக்க இடங்களில் வெற்றியா...? நான் பயந்து போய் விட்டேன்: சசி தரூர் கிண்டல்

கேரளாவின் வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை பற்றி பா.ஜ.க. புரிந்து கொள்ளவேயில்லை என எம்.பி. சசி தரூர் பேசியுள்ளார்.

Update: 2024-02-29 02:21 GMT

திருவனந்தபுரம்,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கேரளாவில், மக்களவை தேர்தலுக்கான போட்டியில், ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதனை கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான வி.டி. சதீசன் உறுதி செய்துள்ளார்.

இதன்படி, கேரளாவில் 20 மக்களவை தொகுதிகளுக்கான போட்டியில் 16 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும். கூட்டணியில் 2-வது பெரிய கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்களும், கே.சி.ஜே. (ஜே.) மற்றும் ஆர்.எஸ்.பி. ஆகிய இரு கட்சிகளுக்கு தலா 1 இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

பா.ஜ.க. கேரளாவில் வாக்கு சதவீத எண்ணிக்கையை அதிகரிப்பது, அதிக இடங்களை கைப்பற்றுவது உள்ளிட்ட விசயங்களில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் தொகுதிக்கான மக்களவை எம்.பி.யாக உள்ள சசி தரூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறும்போது, கேரளாவில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் 6 சதவீதம் என்பதில் இருந்து, 12 முதல் 13 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து உள்ளதற்காக பிரதமர் மோடிக்கு அதற்கான பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

ஆனால், அந்த அளவிலேயே அவர்களின் வளர்ச்சி இருக்கும். அவர்கள் பெற கூடிய ஓட்டு சதவீத உச்ச வரம்பை அடைந்து விட்டனர். வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க. அதிக வளர்ச்சி பெறுவது என்பது சாத்தியமில்லை என கூறினார்.

அவர்கள் 2 இலக்க இடங்களை கைப்பற்றுவார்கள் என அறிந்து நான் பயந்தே போய் விட்டேன். அதற்கான ஒரேயொரு வழி இருக்குமென்றால், அது இரண்டு பூஜ்யங்களாகவே இருக்கும். கேரளாவின் வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை பற்றி பா.ஜ.க. புரிந்து கொள்ளவேயில்லை.

ஒரு சிறிய எல்லைக்கு மேல் கேரளாவில் வகுப்புவாதம் எடுபடாது. அவர்கள் கிறிஸ்தவ சமூகத்தினரை சந்தித்து பேசினார்கள். டெல்லியிலும், கேரளாவிலும் பிரதமர் மோடியே பல முறை, கிறிஸ்தவ மத தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார். ஆனால், மணிப்பூர் பயங்கரத்திற்கு பின்னர், அது வேலைக்காகாது என்று சசி தரூர் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்