போலீஸ் மந்திரி பரமேஸ்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜனதாவினர் கைது

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியதை கண்டித்து போலீஸ் மந்திரி பரமேஸ்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜனதாவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2023-07-27 21:19 GMT

பெங்களூரு:

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியதை கண்டித்து போலீஸ் மந்திரி பரமேஸ்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜனதாவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

வழக்குகளை வாபஸ் பெற முடிவு

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளியில் நடந்த வன்முறையின் போது போலீஸ் நிலையத்திற்கும், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வின் வீட்டுக்கும் தீவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் வன்முறை குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். இந்த வன்முறையில் கைதான அப்பாவிகள் மீது பதிவான வழக்கை வாபஸ் பெற கோரி காங்கிரசை சேர்ந்த தன்வீர்சேட் எம்.எல்.ஏ. போலீஸ் மந்திரி பரமேஸ்வருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இதையடுத்து, டி.ஜே.ஹள்ளி வன்முறையில் கைதான அப்பாவிகள் மீது பதிவான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து பரிசீலனை நடத்தப்படும் என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்து இருந்தார். அத்துடன் வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து பரிசீலிக்கும்படி உள்துறைக்கு அவர் சிபாரிசும் செய்திருந்தார். இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து இருந்தார்கள்.

பரமேஸ்வர் வீட்டை முற்றுகையிட...

இந்த நிலையில், டி.ஜே.ஹள்ளி வன்முறையில் கைதானவர்கள் மீது பதிவான வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்திருப்பதை கண்டித்து பெங்களூரு சதாசிவநகரில் உள்ள போலீஸ் மந்திரி பரமேஸ்வர் வீட்டை பா.ஜனதாவின் யுவ மோர்ச்சா அமைப்பினர் முற்றுகையிட முயன்றனர். இதையொட்டி மந்திரி வீட்டு முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

இதற்கிடையே பா.ஜனதாவினர் ஊர்வலமாக அங்கு வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், தடுத்து நிறுத்தினார்கள். அந்த சந்தர்ப்பத்தில் பரமேஸ்வருக்கு எதிராக பா.ஜனதாவினர் கோஷங்களை எழுப்பினார்கள்.

பா.ஜனதாவினர் கைது

மேலும் மந்திரி பரமேஸ்வர் வீட்டின் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், வன்முறையில் ஈடுபட்டவர்களை அரசு பாதுகாக்க கூடாது, அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறக்கூடாது என கோஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் போலீஸ் பாதுகாப்பையும் மீறி பரமேஸ்வர் வீட்டை முற்றுகையிட பா.ஜனதாவினர் முயன்றனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட யுவ மோர்ச்சா அமைப்பினரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.

Tags:    

மேலும் செய்திகள்