வருமான வரித்துறை சோதனையில் பணம் சிக்கிய விவகாரம்: கர்நாடகத்தில் இன்று பா.ஜனதா ஆர்ப்பாட்டம் - நளின்குமார் கட்டீல் தகவல்

வருமான வரித்துறை சோதனையில் பணம் சிக்கிய விவகாரத்தில் கர்நாடகத்தில் இன்று பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று அம்மாநில தலைவர் நளின்குமார் கட்டில் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-15 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எனது தலைமையில் பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்று (நேற்று) நடைபெற்றது. வருமான வரித்துறை சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் சிக்கியுள்ளது. இதில் காங்கிரசுக்கு தொடர்பு உள்ளது. அதனால் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்யக் கோரி பா.ஜனதா சார்பில் கர்நாடகத்தில் மாவட்ட தலைநகரங்களிலும் நாளை (இன்று) ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதுகுறித்து எங்கள் கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். நாளை மறுநாள் (நாளை) வட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். தசரா விழாவில் பங்கேற்கும் கலைஞர்களிடமும் லஞ்சம் வாங்குகிறார்கள். தன்னிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் கலைஞர் ஒருவரே கூறியுள்ளார். சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் கர்நாடகம் அக்கட்சி தலைவர்களுக்கு ஏ.டி.எம். ஆக மாறும் என்று சொன்னோம். இதற்கு ஆதாரங்கள் தாருங்கள் என்று கேட்டனர்.

இந்த அரசு காண்டிராக்டர்களுக்கு ரூ.600 கோடி பாக்கியை விடுவித்தது. இந்த பாக்கி விடுவித்து இரண்டே நாட்களில் காண்டிராக்டர் வீட்டில் ரூ.42 கோடியும், கட்டுமான அதிபர் வீட்டில் ரூ.40 கோடியும் சிக்கியுள்ளது. இந்த பணத்திற்கும், காங்கிரசுக்கும் சம்பந்தம் உள்ளது. இந்த கொள்ளை அரசின் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

கர்நாடகத்தில் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து 5 மாநில சட்டசபை தேர்தல் செலவுக்கு காங்கிரஸ் அனுப்புகிறது. பிற மாநில தேர்தல்களுக்கு கர்நாடகம் ஏ.டி.எம்.ஆக காங்கிரசுக்கு பயன்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்