மல்லிகார்ஜுன கார்கே, குடும்பத்தினரை கொல்ல பா.ஜனதா சதி

பா.ஜனதா வேட்பாளர் பேசிய ஆடியோவை வெளியிட்ட காங்கிரஸ், மல்லிகார்ஜுன கார்கே, குடும்பத்தினரை கொல்ல சதி செய்திருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளது.

Update: 2023-05-06 21:45 GMT

பெங்களூரு:-

காங்கிரஸ் குற்றச்சாட்டு

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கர்நாடகத்தில் முகாமிட்டு இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி, தன்னை கொல்ல காங்கிரஸ் சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும், அக்கட்சி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும், கர்நாடக மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அவரது மனைவி, அவரது பிள்ளைகளை கொல்ல பா.ஜனதா சதி செய்து இருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளது. இது அரசியல் அரங்கில் புயலை கிளப்பி உள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

கார்கேவை கொல்ல சதி

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. இதனால் தோல்வி பயத்தில் உள்ள பா.ஜனதா அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அவரது மனைவி, மகன் உள்பட குடும்பத்தினரை கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளது. பிரதமர் மோடி, முதல்-மந்திரி பசவராஜ்

பொம்மையின் நெருங்கிய ஆதரவாளரும், சித்தாபுரா பா.ஜனதா வேட்பாளருமான மணிகண்ட ரத்தோடு இதுதொடர்பாக பேசியுள்ளார். அதில் மல்லிகார்ஜுன கார்கே, குடும்பத்தினரை கொல்ல திட்டமிட்ட சதி பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகத்தில் முக்கிய தலைவர், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ளார். தலித் சமுதாயத்தை சேர்ந்த அவர் தொழிலாளி குடும்பத்தில் பிறந்து காங்கிரஸ் தொகுதி தலைவர் பதவியில் இருந்து படிப்படியாக முன்னேறி இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜனதா அவரை கொல்ல சதி செய்துள்ளது.

தோல்வி விரக்தி

கடந்த மே 2-ந்தேதி ராஜஸ்தான் மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான மதன் திலாவர், கார்கேவுக்கு 80 வயது ஆகிறது. அவர் மரணம் அடைவார் என வெறுப்பை வெளிப்படுத்தினார். கடவுள் எப்போது வேண்டுமானாலும் அவரை அழைக்கலாம். இப்போது பா.ஜனதா தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கேவை கொல்ல செய்த சதி அம்பலமாகியுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் தோல்வி அடையும் விரக்தியில் உள்ள பா.ஜனதாவும், அதன் தலைவர்களும் இந்த சதியில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக செய்த திட்டங்கள், செய்யப்போகிற திட்டங்கள் பற்றி பேசாமல், தங்களின் 40 சதவீத கமிஷன், ஊழலை மறைக்க தினமும் உணர்வுப்பூர்வமான விஷயங்களை பேசி சமுதாயத்தை உடைக்க பார்க்கிறார்கள். எவ்வளவு தந்திரம் செய்தாலும் வெற்றி பெற முடியவில்லை என கோபத்தில் பா.ஜனதா தற்போது இத்தகைய படுகொலை ஆயுதத்தை பயன்படுத்த தயாராகி வருகிறது.

பாரம்பரியம் மீது தாக்குதல்

கர்நாடகம் பசவண்ணரின் பூமி. நல்லிணக்கம், ஜனநாயக அமைப்பின் சொந்த வரலாற்றை கொண்டது கர்நாடகம். கர்நாடகத்தின் இத்தகைய பாரம்பரியம் மீது பா.ஜனதா தாக்குதல் நடத்துகிறது. இது மல்லிகார்ஜுன கார்கேவை மட்டுமல்ல கன்னடர்களை கொல்ல திட்டமிட்ட சதி. இதுபற்றி நடவடிக்கை எடுக்காமல் பிரதமர் மோடி, முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, தேர்தல் ஆணையம் மவுனமாக இருக்கிறார்கள். இந்த தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்தால் 6.50 கோடி கன்னடர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அக்கட்சி தலைவர்கள் கூறிவருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, பா.ஜனதா வேட்பாளர் மணிகண்ட ரத்தோடு பேசிய ஆடியோவை வெளியிட்டார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்