144 மக்களவை தொகுதிகளில் பிரதமர் மோடி பங்குபெறும் மெகா பேரணி - தேர்தலில் வெற்றி பெற பாஜக வியூகம்!

பாஜக தோல்வியடைந்த 144 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கி மெகா பேரணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2022-10-08 16:13 GMT

புதுடெல்லி,

மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான அடுத்த பொதுத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறும். இந்த நிலையில், அடுத்த பொதுத் தேர்தலில் பாஜக பலத்தை உயர்த்தும் நோக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்குபெறும் மெகா பேரணிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்த 144 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கி மெகா பேரணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக கட்சியை வலுப்படுத்த விரிவான திட்டத்தை பாஜக தயாரித்துள்ளது.முதல் கட்ட திட்டத்தின்படி, பல மத்திய மந்திரிகள் இந்த தொகுதிகளுக்குச் சென்று பாஜக தொண்டர்களுடனும் பொதுமக்களுடனும் சந்திப்புகளை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, கடந்த மாதம், பல்வேறு மத்திய மந்திரிகளுடன் பாஜக தலைவர் ஜேபி நட்டாவும், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவும் கட்சியின் விரிவான திட்டம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.

இரண்டாம் கட்ட திட்டத்தின்படி, 2024 பொதுத் தேர்தலில் இந்த தொகுதிகளில் பா.ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்புகளை பிரகாசமாக்க பிரதமர் நரேந்திர மோடி பங்குபெறும் மெகா பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் வைத்திருக்கும் முக்கிய தொகுதிகளான உத்தரபிரதேசத்தின் ரேபரேலி (சோனியா காந்தி, காங்கிரஸ்), மைன்புரி (முலாயம் சிங் யாதவ், சமாஜ்வாதி கட்சி), மராட்டியம் பாராமதி (சுப்ரியா சுலே, தேசியவாத காங்.), மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் (மிமி சக்ரவர்த்தி, திரிணாமுல் காங்.); தெலுங்கானாவின் மக்பூப்நகர் (ஸ்ரீனிவாசா ரெட்டி, டிஆர்எஸ்) மற்றும் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா (நகுல் நாத், காங்கிரஸ்) உள்பட 144 தொகுதிகள் இதில் அடங்கும்.

இந்த 144 தொகுதிகளில் பெரும்பாலானவை 2019 தேர்தலில் அக்கட்சி இழந்தவையாகும். அந்த மக்களவைத் தொகுதிகளில் இத்திட்டத்தின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்க ஒரு குழுவையும் பாஜக அமைத்துள்ளது.

144 மக்களவைத் தொகுதிகளில் பெரும்பான்மையை வெல்வதே இலக்கு. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்