கவர்னர் கெலாட்டிடம் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பரபரப்பு புகார்; ஜெயின் துறவி கொலையில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு போராட்டம்

கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பரபரப்பு புகார் கூறியுள்ளனர்.

Update: 2023-07-12 18:45 GMT

பெங்களூரு:

பெலகாவியில் ஜெயின் மத துறவி காமகுமார நந்தி மகாராஜா கடந்த வாரம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பல துண்டுகளாக வெட்டி வீசப்பட்டது. இதுதொடர்பாக பெலகாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. இதை வலியுறுத்தி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து அவர்கள் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் விதான சவுதாவில் இருந்து ஊர்வலமாக கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் தங்களின் கைகளில் காங்கிரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருந்தனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.

அங்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், கொலைகள் அதிகரித்துவிட்டதாகவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிடுமாறும் கோரியுள்ளனர். இந்த சந்திப்புக்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு

இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கொலை, கொள்ளைகள் அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஆனால் இதை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்களின் தொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் துறை முழுவதுமாக தோல்வி அடைந்துவிட்டது. பா.ஜனதா தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்கள் மீது பொய் வழக்குகளை போடுகிறார்கள்.

பெங்களூருவில் பட்டப்பகலில் தகவல் தொழில்நுட்ப நிறுவன நிர்வாகிகள் 2 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்கிறவர்களுக்கு சட்டம், போலீஸ் மீது பயம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், நமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று கருதி சமூக விரோதிகள் கொலை-கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அடிமட்டத்தில் பணியாற்றும் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்கிறார்கள். மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீஸ்காரர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதை சரிசெய்யாவிட்டால் மக்கள் ஒரு அச்சமான சூழலில் வாழும் நிலை உண்டாகும். ஜெயின் மத துறவி கொலையில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். இதை மாநில அரசு நிராகரித்துள்ளது. இந்த அரசு பிடிவாத போக்குடன் செயல்படுகிறது.

இந்த விஷயம் குறித்து கவர்னருக்கு அனைத்து தகவல்களையும் அளித்துள்ளோம். கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.யை அழைத்து, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும்படி உத்தரவிடக் கோரியுள்ளோம். இதுகுறித்து உரிய உத்தரவு பிறப்பிப்பதாக கவர்னர் எங்களுக்கு உறுதி அளித்துள்ளார். சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவது தான் அரசின் முதன்மையான பணி. அப்பாவிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது. மேலும் இந்த விவகாரத்தை மக்களிடம் கொண்டு செல்வோம். சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு குறித்து மாவட்ட, தாலுகா தலைநகரங்களில் போராட்டம் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்