சட்டசபையில் மும்முரமாக ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த எம்.எல்.ஏ
திரிபுரா சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் ஒருவர், கூட்டத்தொடரின் இடையே மும்முரமாக ஆபாச படம் பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.;
அகர்தலா,
வடக்கு திரிபுராவை சேர்ந்தவர் ஜதப் லால் நாத். முதல் முறை எம்எல்ஏவான இவர், பக்பசா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர். இந்த ஜதப் லால் நாத் தனது செல்போனில் ஆபாச படம் பார்க்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கூட்டத்தொடர் நடந்து கொண்டிருப்பதும், சபாநாயகர் பிஸ்வ பந்து சென் உள்ளிட்டோர் குரலும் தெளிவாக கேட்கின்றன. சக உறுப்பினர்கள் சூழ்ந்திருக்க, சற்று நேரம் மடியில் செல்போனை விரித்து ஆபாச படம் பார்க்கும் ஜதப் லால், அதன் பின்னர் மேஜை மீதே செல்போனை வைத்து ஆபாச படங்களை பகிரங்கமாக ரசித்துக்கொண்டிருந்தார். அவ்வபோது போரடிக்கும் போது, சபை நிகழ்ச்சிகளையும் கவனிக்கிறார்.
இந்த வீடியோவை பரப்பியவர்கள், பொதுநலன் கருதி ஆபாச வீடியோவை மறைத்துள்ளனர். வீடியோ வைரலானதை அடுத்து, திரிபுரா பாஜக தலைவர் ராஜிப் பட்டாச்சாரியா, 'சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும், முதல் கட்டமாக ஜதப் லால் நாத்துக்கு நோட்டீஸ் விடுக்கப்படும்' என்றும் உறுதி அளித்துள்ளார்.
இதற்கு முன்னதாகவும், கர்நாடக மாநிலம் உட்பட பாஜகவை சேர்ந்த பல்வேறு எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்ததான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இத்துடன் பாலியல் குற்றச்சாட்டுகளில், கேமரா கண்களில் அப்பட்டமாக சிக்கிய பல பாஜக நிர்வாகிகள் தொடர்பான பதிவுகளும், ஜதப் லால் நாத் பதிவுடன் மீண்டும் வைரலாகி வருகின்றன.