சட்டசபை தேர்தல் தோல்விக்கு பா.ஜனதாவினரே காரணம்-முன்னாள் மந்திரி சோமண்ணா பேட்டி

நான் எப்படி தோற்கடிக்கப்பட்டேன் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், சட்டசபை தேர்தலில் தோல்வி அடைய பா.ஜனதாவினரே காரணம் என்று முன்னாள்மந்திரி சோமண்ணா தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-12 21:03 GMT

பெங்களூரு:-

பெங்களூருவில் நேற்று முன்னாள் மந்திரி சோமண்ணா நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதாவினரே காரணம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டேன். ஒரு தொகுதியில் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். மற்றொரு தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தேன். அந்த 2 தொகுதிகளிலும் எப்படி தோற்கடிக்கப்பட்டேன் என்பது அனைவருக்கும் தெரியும். சட்டசபை தேர்தலில் எனது தோல்விக்கு பா.ஜனதாவினரே காரணம். சொந்த கட்சிக்காரர்கள் செய்த மோசடியில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. அவர்கள் யார்? என்பதை எனது வாயால் சொல்ல முடியாது.

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தலைமை கூறியதால், 2 தொகுதிகளில் போட்டியிட்டேன். கட்சி கொடுத்த உத்தரவை மீறாமல் நான் ஒருவன் மட்டுமே நடந்து கொண்டேன். அப்படி இருந்தும் சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்ததை இதுவரை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பா.ஜனதா மாநில தலைவர் பதவி கொடுக்கும்படி கட்சி தலைமையிடம் கேட்டு வருகிறேன். எனக்கு மாநில தலைவர் பதவி வழங்கினால் திறமையாக நிர்வகிப்பேன்.

பணத்தை விடுவிக்க வேண்டும்

மேலும் கர்நாடக பா.ஜனதாவுக்கு 2 செயல் தலைவர்களை நியமித்தாலும் வரவேற்பேன். டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் சேர்ந்தவர் இல்லை. அவர் 6 கோடி மக்களுக்கும் துணை முதல்-மந்திரி ஆவார். பெங்களூரு நகரின் எதிர்கால வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை டி.கே.சிவக்குமார் கொண்டு வருவதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் ஒப்பந்ததாரர்கள் அனைவரும் தவறு செய்திருப்பதாக கூறுவது சரியில்லை. ஒப்பந்ததாரர்களுக்கு உடனடியாக அரசு பணத்தை விடுவிக்க வேண்டும்.

ஏனெனில் ஒரு ஒப்பந்ததாரரை நம்பி 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பம் உள்ளது. தற்போது அந்த ஏழை தொழிலாளர்கள் சொந்த ஊரான கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். பா.ஜனதா மீது குற்றச்சாட்டு கூறிய காங்கிரஸ் தலைவர்கள் எந்த ஆவணங்களையும் வெளியிடவில்லை. தற்போது பா.ஜனதா மட்டும் ஆவணங்களை வெளியிடவில்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்