சாதி, மத விஷத்தை மக்களிடம் விதைப்பதே பா.ஜனதா தான்
சாதி, மத விஷத்தை மக்களிடம் விதைப்பதே பா.ஜனதா தான் என்று ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
பெங்களூரு:-
பா.ஜனதா மீது குற்றச்சாட்டு
பெங்களூரு தேவனஹள்ளி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கெம்பேகவுடாவின் 108 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11-ந்தேதி திறந்து வைத்திருந்தார். இந்த சிலை திறப்புக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரிகளுக்கு முறைப்படியான அழைப்பு விடுக்கப்படவில்லை என்று காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் அரசு மீது குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக 3 கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். கெம்பேகவுடா சிலை திறப்புக்கு தேவேகவுடாவை அழைக்காதது குறித்து ஜனதாதளம் (எஸ்) கட்சி அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;-
மிகப்பெரிய தவறு
ஜனதாதளம் (எஸ்) கட்சி எப்போதும் தேவேகவுடாவை சாதி அரசியலுக்காக பயன்படுத்தியதில்லை. பிரதமர் கர்நாடகத்தில் அரை நாள் இருந்தாலும், அவரது உத்தேகம் என்ன என்பது குறித்து பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளே சாட்சி. அதுபற்றி ஜனதாதளம் (எஸ்) எதுவும் சொல்ல வேண்டியதில்லை. கெம்பேகவுடா சிலை திறப்புக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை பா.ஜனதா அரசு அழைக்காதது மிகப்பெரிய தவறு.
இந்த விவகாரத்தில் பா.ஜனதாவினர் கூறும் பொய் குறித்து மக்களுக்கு நன்கு தெரியும். கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது. அதற்காக இன்னும் 6 மாதங்கள் பிரதமர் மோடி எத்தனை முறை கர்நாடகத்திற்கு ஓடி வருகிறார் என்று பார்க்கலாம். பா.ஜனதாவில் உள்ள ஒக்கலிக சமுதாய தலைவர்கள் முன்னுக்கு வரக்கூடாது என்று குமாரசாமி நினைப்பதாக பா.ஜனதாவினர் பொய் பிரசாரம் செய்கிறார்கள்.
பா.ஜனதா நிகழ்ச்சி இல்லை
சாதி, மத விவகாரத்தில் மக்களிடம் விஷத்தை விதைப்பது பா.ஜனதா தான். கெம்பேகவுடா சிலை திறப்பு நிகழ்ச்சி அரசு சார்பாக நடத்தப்பட்டதாகும். அதனால் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை முறையாக அழைத்திருக்க வேண்டும். இதுபற்றி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், தலைமை செயலாளரும் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
கெம்பேகவுடா சிலை திறப்பு பா.ஜனதா கட்சியின் நிகழ்ச்சி இல்லை. அப்படி இருக்கையில் தேவேகவுடாவை அழைக்காதது குறித்து பா.ஜனதா தலைவர்கள் எதற்காக விளக்கம் அளிக்க வேண்டும். இதன்மூலம் திட்டமிட்டே தேவேகவுடாவை கெம்பேகவுடா சிலை திறப்புக்கு அழைக்காமல் பா.ஜனதாவினர் புறக்கணித்துள்ளனர்.
இவ்வாறு ஜனதாதளம (எஸ்) கட்சி கூறியுள்ளது.