சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் அரசுகள் கண்டுகொள்ளவில்லை - பா.ஜனதா குற்றச்சாட்டு
சாதிவாரி கணக்கெடுப்பை முந்தைய காங்கிரஸ் அரசுகளே கண்டுகொள்ளவில்லை என பா.ஜனதா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது ராகுல் காந்தி இந்த கோரிக்கையை எழுப்பினார்.
இதன் தொடர்ச்சியாக கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி இருந்தது. இது தொடர்பாக மாநில சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை மாநில பா.ஜனதா ஆதரித்து இருந்தது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பை புறக்கணித்த நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. அந்தவகையில் கடந்த 2010-ம் ஆண்டு பிரணாப் முகர்ஜி தலைமையிலான மந்திரிகள் குழு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் முடிவு எடுக்கவில்லை எனவும் பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இதைப்போல நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்ததாகவும், அவரை பின்பற்றி இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரும் மண்டல் கமிஷன் அறிக்கையை கிடப்பில் போட்டதாகவும் பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை அப்போதைய காங்கிரஸ் முதல்-மந்திரி சித்தராமையா வெளியிடவில்லை எனவும் பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இவ்வாறு சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக காங்கிரஸ் அரசுகள் எந்த முடிவும் எடுக்காதபோது, தற்போது அரசியல் நோக்கில் இந்த பிரச்சினையை எடுத்து ராகுல் காந்தி பாசாங்கு செய்வதாக பா.ஜனதா தலைவர்கள் சாடியுள்ளனர்.