வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய 8-ந்தேதி பா.ஜனதா உயர்நிலை குழு கூடுகிறது

வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய பா.ஜனதாவின் உயர்நிலை குழு கூட்டம் வருகிற 8-ந் தேதி டெல்லியில் நடைபெறும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2023-04-03 21:35 GMT

பெங்களூரு:

வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய பா.ஜனதாவின் உயர்நிலை குழு கூட்டம் வருகிற 8-ந் தேதி டெல்லியில் நடைபெறும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தல்

கா்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. இதில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஜனதாதளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.

அதுபோல் காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அந்த கட்சி இன்னும் 100 தொகுதிகளுக்கு மட்டுமே அறிவிக்க வேண்டியதுள்ளது. விரைவில் அறிவிக்க இருப்பதாக தெரிகிறது.

பா.ஜனதா வேட்பாளர் பட்டியல்

ஆனால் ஆளும் பா.ஜனதா கட்சி இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. இருப்பினும் அக்கட்சி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் அந்த கட்சி 3 வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து விவாதிக்க 2 நாள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.

இதில் ஒவ்வொரு தொகுதிக்கு தலா 2 வேட்பாளர்கள் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியல் டெல்லி பா.ஜனதா மேலிட தலைவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதில் அவர்கள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய உள்ளனர். அதன் பிறகு பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் 8-ந்தேதி கூடுகிறது

இந்த நிலையில், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய பா.ஜனதாவின் உயர்நிலை குழு கூட்டம் வருகிற 8-ந் தேதி நடைபெற வாய்ப்பு உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கட்சியின் மாவட்ட குழுக்கள் பெயர்களை பரிந்துரை செய்துள்ளன. அதுகுறித்து நாளை (இன்று) கட்சியின் மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதில் விவாதிக்கப்படும் அம்சங்கள் அடிப்படையில் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய அறிக்கை கட்சியின் உயர்நிலை குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கடும் போட்டி

கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் வருகிற 8-ந் தேதி நடைபெறும். அந்த கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும். தேர்தலில் போட்டியிட டிக்கெட் பெற எங்கள் கட்சியில் கடும் போட்டி நிலவுகிறது. நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதற்கு இதுவே ஒரு அறிகுறி. நாங்கள் ஒவ்வொரு தொகுதியில் இருக்கும் நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை பெற்றுள்ளோம். நான் வேறு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நான் சிக்காவி தொகுதியில் தான் போட்டியிடுகிறேன். வேறு எங்கும் செல்லவில்லை.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்