கேரளாவில் மீண்டும் பரவும் பறவை காய்ச்சல்: 20 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1,500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன.

Update: 2022-10-28 02:38 GMT

ஆழப்புழா,

இந்தியாவில் அடிக்கடி பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்படும்போது ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்படுவதுடன், கோழி மற்றும் முட்டை விற்பனை வீழ்ச்சியடைந்து கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், கேரளாவில் கடந்த 2 ஆண்டுகளில் 3வது முறையாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1,500 வாத்துகள் திடீரென இறந்துள்ளன. ஏராளமான வாத்துக்கள் இறந்ததால் கால்நடை பராமரிப்புத்துறையினர் இறந்த வாத்துக்களின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் பரிசோதனை முடிவில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ஆலப்புழா மாவட்டம் வாழுத்தனம் நகராட்சி கட்டுப்பாட்டு பகுதியாக அறவிக்கப்பட்டு, அங்கிருந்து பறவைக்காய்ச்சல் வேறு இடங்களுக்கு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் 1500 வாத்துகள் உயிரிழந்த நிலையில், 20 ஆயிரம் கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.கேரளாவில் பொது சுகாதார நடைமுறைகள், மேலாண் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பறவை காய்ச்சல் பரவலை எதிர்கொள்வதற்கான ஒழுங்குமுறைகள் உள்ளிட்ட விசயங்களில் மாநில சுகாதார துறைக்கு உதவியாக இந்த குழு செயல்படும்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டதால், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோழிப் பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்