மக்களவையில் கூட்டுறவு மசோதா நிறைவேறுமா? - எதிர்க்கட்சிகள் புயலைக் கிளப்ப திட்டம்

மக்களவையில் இந்த வாரம் சர்ச்சைக்குரிய கூட்டுறவு சங்க மசோதா நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் புயலைக்கிளப்ப திட்டமிட்டுள்ளன.

Update: 2022-12-19 00:24 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது.

இந்த கூட்டத்தொடரில் 17 அமர்வுகளை நடத்துவதுடன், 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு திட்டமிட்டது. ஆனால் ஒவ்வொரு கூட்டத்தொடரும், ஏதேனும் ஒரு பிரச்சினையில் சிக்கி முடங்குவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் இந்த கூட்டத்தொடரும் கடந்த சில நாட்களாக சீன எல்லை மோதல் (தவாங்) விவகாரத்தால் முடங்கி வருகிறது.

இரு சபைகளிலும் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஓங்கிக் குரல் கொடுக்கின்றன. ஆனால் இந்த விவகாரத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அறிக்கை அளித்ததுடன் முடித்து விட மத்திய அரசு எண்ணுகிறது. ஆனால் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அடம்பிடித்து வருகின்றன.

இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி 29-ந் தேதி வரை நடத்தாமல், 1 வாரம் முன்னதாக வருகிற வெள்ளிக்கிழமையே முடித்து விட பரிசீலிக்கப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சைக்குரிய கூட்டுறவு மசோதா

இதற்கிடையே, பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்த) சட்ட மசோதாவை கடந்த 7-ந் தேதி பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த மசோதா, கூட்டுறவுத்துறையில் வெளிப்படையான தன்மைக்கும், பொறுப்புகூறலுக்கும் வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி பல மாநில கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை வலுப்படுத்துதல், தேர்தல் செயல்முறையை சீர்திருத்துதல் போன்றவற்றுக்கும் இது உதவும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உரத்த குரல் எழுப்புகின்றன.

இந்த மசோதா சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது சட்டமானால், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாக அமையும் என்பது எதிர்க்கட்சிகளின் கருத்தாக உள்ளது.

இந்த வாரம் இந்த மசோதா மக்களவையில் விவாதத்துக்கு வர உள்ளது. அப்போது எதிர்க்கட்சிகள் புயலைக்கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த வாரத்தில், வழக்கத்தில் இல்லாத சட்டங்களை ஒழித்துக்கட்டுவதற்கான மசோதாவையும் அறிமுகப்படுத்த மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இப்படிப்பட்ட 1,486 சட்டங்களை மத்திய அரசு ஒழித்துக்கட்டிவிட்டது நினைவுகூரத்தக்கது.

தமிழ்நாட்டு பழங்குடியினர் பட்டியல் திருத்தம்

கடல்சார் கொள்ளை தடுப்பு மசோதா, அரசியல் சாசனம் (பழங்குடியினர்) ஒழுங்கு 2-வது திருத்த மசோதா, 3-வது திருத்த மசோதா ஆகியவை மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு அரசியல் சாசன திருத்த மசோதாக்களும் தமிழ்நாட்டிலும், இமாசலபிரதேசத்திலும் பழங்குடியினர் பட்டியலை மாற்றியமைப்பதற்கான மசோதாக்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்