பீகார்: கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு! பலருக்கு கண் பார்வை பாதிப்பு!

கள்ளச்சாராயம் அருந்திய பலருக்கும் கண் பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-05 08:22 GMT

பாட்னா,

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள சப்ராவில் பனன்பூர் கிராமத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) மத நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்கு சிலர் சட்டவிரோதமாக விற்கப்பட்ட உள்ளூர் சாராயத்தை அருந்தியுள்ளனர். அதில் இரண்டு பேர் சாராயம் அருந்திய இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இதன் பக்கவிளைவாக, கள்ளச்சாராயம் அருந்திய பலருக்கும் கண் பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பலர், பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சாப்ரா சதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் இந்த இறப்பிற்கான காரணத்தை கண்டறிய மருத்துவர்கள் குழு பனன்பூர் கிராமத்திற்கு சென்றுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி, மது கடத்தல்காரர்களை பிடிக்க அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர் ராஜேஷ் மீனா கூறியுள்ளார்.

சரண் சரக எஸ்.பி சந்தோஷ் குமார் கூறுகையில், "ஆகஸ்ட் 2, 2022 அன்று நாக பஞ்சமி கொண்டாட்டத்தின் போது கிராமத்தில் சிலர் மது அருந்தினர். மர்ஹவுரா மற்றும் சோன்பூர் டிஎஸ்பிகள் கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம். இறப்புக்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை அறிக்கைகள் காத்திருக்கிறோம்" என்றார்.

ஏப்ரல் 2016 முதல் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்த போதிலும், இந்த ஆண்டில் மட்டும் பீகாரில் கடந்த ஆறு மாதங்களில் நடந்த மூன்றாவது பெரிய கள்ளச்சாராயம் தொடர்பான சம்பவம் இதுவாகும்.

Tags:    

மேலும் செய்திகள்