நவராத்திரி நேரத்தில் மீன் சாப்பிடலாமா?: பா.ஜ.க.வின் விமர்சனங்களுக்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ் நேற்று மீன் சாப்பிடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.;
பாட்னா,
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் (ஆர்.ஜே.டி) தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், பிரசாரத்துக்காக ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருக்கும்போது மீன் சாப்பிடும் வீடியோ ஒன்றை எக்ஸ் வலைதளத்தில் நேற்று வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், கூட்டணி கட்சி (விஐபி) தலைவரான முகேஷ் சஹானியுடன், பிரசாரத்துக்கு செல்லும் பயணத்தின் நடுவே 10-15 நிமிட இடைவெளியில் 'செக்ரா' மீன் மற்றும் ரொட்டியை சாப்பிடுவதாக அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
நவராத்திரி முதல் நாள் நேற்று துவங்கியது. இந்த சூழலில் மீன் சாப்பிடும் வீடியோவை தேஜஸ்வி பகிர்ந்ததை குறிப்பிட்டு அவர் தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குகளைப் பெறுவதற்காக சனாதனி வேடம் பூண்டுகொள்வதாகவும், மற்ற நேரங்களில் சனாதன தர்மத்துக்கு எதிராக செயல்படுவதாகவும் பா.ஜ.க. விமர்சித்தது.
இது தொடர்பாக மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறுகையில், "தேஜஸ்வி யாதவ் ஒரு சீசன் சனாதனி. அவரது தந்தை (லாலுபிரசாத் யாதவ்) ஆட்சியில் இருந்தபோது ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தினர் பீகாருக்குள் ஊடுருவினர். அவர்கள் சனாதன முகமூடி அணிந்து சமரச அரசியல் செய்கிறார்கள்." என்றார்.
இதேபோல் பா.ஜ.க.வை சேர்ந்த பீகார் துணை முதல்- மந்திரி விஜய் சின்ஹா கூறுகையில், "ஒரு சிலர் தங்களை சனாதனத்தின் மகனாகக் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால், சனாதனத்தின் மதிப்புகளைக் காப்பாற்றுவதில்லை. உணவுப் பழக்கத்தில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் நவராத்திரியில் மீன் சாப்பிடும் வீடியோவை காட்டுவதன் மூலம் நீங்கள் ஏமாற்று அரசியலில் ஈடுபடுகிறீர்கள்" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பா.ஜ.க.வின் விமர்சனங்களுக்கு தேஜஸ்வி யாதவ் இன்று தனது எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார். அதில், பா.ஜ.க.வில் உள்ளவர்களின் புத்திசாலித்தனத்தை சோதிப்பதற்காகவே இந்த வீடியோவை பதிவு செய்தேன். அந்த வீடியோவை நான் நேற்று பகிர்ந்திருந்தாலும் அது நவராத்திரிக்கு முந்தைய நாளான கடந்த 8ம் தேதி அன்று பதிவு செய்யப்பட்ட வீடியோ என்பதை அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதை கவனிக்காமல் எதிர்கட்சியினரை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பா.ஜ.க.வினர் செயல்பட்டு வருவதாக நாங்கள் நினைத்ததை சரி என்று நிரூபித்து விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.