முதல்-மந்திரி நாற்காலியை இப்போதே தேஜஸ்விக்கு கொடுத்துவிடுங்கள் - பிரசாந்த் கிஷோர்

பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவை, நிதிஷ் குமார் இப்போதே முதல்-மந்திரியாக்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-12-17 18:24 GMT

பாட்னா,

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பீகாரில் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டதையடுத்து, முதல்-மந்திரி நிதிஷ் குமாரையும், அவரின் ஆட்சியையும் தொடர்ந்து விமர்சித்துவருகிறார்.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி நடைபெற்ற கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார், "நான் பிரதமர் வேட்பாளரும் அல்ல. முதல்-மந்திரி வேட்பாளரும் அல்ல. எனது இலக்கு பாஜகவை தோற்கடிப்பதுதான் என்றும், நாங்கள் அனைவரும் அதற்காக உழைத்து வருகிறோம். மேலும், 2025-ம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையில் போட்டியிடுவோம். பீகார் மக்களின் வளர்ச்சிக்காக நான் உழைத்துவருகிறேன். அதேபோல் எதிர்காலத்தில் நல்ல பணிகளைத் தொடர்வதற்கான தேஜஸ்வி யாதவின் நேரம் இது" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், " முதல்-மந்திரி நிதிஷ் குமார் 2025 வரை காத்திருக்க வேண்டாம், இப்போதே முதல்-மந்திரி நாற்காலியைத் தேஜஸ்வி யாதவுக்கு கொடுத்துவிடுங்கள். இதன்மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு முதல்-மந்திரியாக பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிட்டும். அவரது தகுதியை மக்களும் அறிந்து கொள்ள முடியும். அதன் அடிப்படையில், மக்கள் தங்கள் வாக்குகளை அளிப்பார்கள்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்