மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்
மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் இருந்து 5 எம்.எல்.ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்து உள்ளனர்.
பாட்னா,
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்-மந்திரியாக பைரன் சிங் இருந்து வருகிறார். 60 சட்டசபை தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்றது. 6 இடங்களில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி வெற்றி பெற்றது.
இந்நிலையில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் இருந்து 5 எம்.எல்.ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்தனர். இது நிதிஷ் குமாருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பீகாரில் பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்துக் கொண்டு, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியின் ஆதரவுடன் நிதிஷ் குமார் மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த நடவடிக்கையை பாஜக மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அருணாச்சல பிரதேசத்தின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஒரே எம்.எல்.ஏவான டெச்சி கசோ, கடந்த மாதம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.