கெஜ்ரிவால் உதவியாளர் என்னை 8 முறை கன்னத்தில் அறைந்தார் - சுவாதி மாலிவால்

சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-17 10:30 GMT

புதுடெல்லி,

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்.பி சுவாதி மாலிவால் கடந்த மே 13ம் தேதி காலை டெல்லி போலீசிடம் போன் மூலம் முறையிட்டார். இதனையடுத்து டெல்லி போலீசார் இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து தொடக்கத்தில் மவுனம் காத்துவந்த ஆம் ஆத்மி கட்சி பின்னர் சுவாதி தாக்கப்பட்டது உண்மைதான் எனவும், இந்த விவகாரம் குறித்து கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் எனவும் விளக்கமளித்தது. இதற்கிடையே டெல்லி பா.ஜ.க.வினர் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசியல் ரீதியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

இதற்கிடையே, சுவாதி மாலிவால் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். இதனை தொடர்ந்து பிபவ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் பிபவ் குமார் அங்கு இல்லாததால் அவரை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சுவாதி தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில் கூறியிருப்பதாவது,

கெஜ்ரிவாலை நான் சந்திக்க சென்றபோது அவரது உதவியாளர் பிபவ் குமார் 8 முறை என் கன்னத்தில் அறைந்தார். என்னை விட்டு விடுமாறு கெஞ்சியும் நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் பிபவ் குமார் எட்டி உதைத்தார். என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது. கொன்று புதைப்பேன் என பிபவ் குமார் மிரட்டினார். மேலும் அவர் என் முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதிகளிலும் தாக்கினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, சுவாதியை கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் தாக்குவது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக, டெல்லி போலீசார் சுவாதி மாலிவாலை மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்