அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவின் வளர்ச்சிக்கு அத்வானி ஆற்றிய பங்களிப்பு மகத்தானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. இந்நிலையில் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் அவரிடம் பேசி, இந்த கவுரவம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். நம் காலத்தின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு மகத்தானது. அடிமட்டத்தில் பணியாற்றியதில் இருந்து நமது துணைப் பிரதமராக நாட்டுக்கு சேவை செய்வது வரையிலான வாழ்க்கை அவருடையது. அவர் நமது உள்துறை மந்திரியாகவும், தகவல் தொடர்பு துறை மந்திரியாகவும் தன்னை சிறப்பித்துக் கொண்டார். அவரது நாடாளுமன்றத் தலையீடுகள் எப்பொழுதும் முன்னுதாரணமானவை, வளமான நுண்ணறிவுகள் நிறைந்தவை."
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.