திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் விபத்தில் சாவு
உடுப்பியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். வருங்கால கணவருடன் திருமணத்துக்கு ஆடை வாங்கி வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
மங்களூரு:-
திருமணம் நிச்சயம்
உடுப்பி மாவட்டம் படுபித்ரி போலீஸ் எல்லைக்குட்பட்ட கஞ்சிநடுக்கா பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா நிகாலா (வயது 18). இவருக்கும் பெலாப்பூர் பகுதியை சேர்ந்த முகமது ஷெரீப் என்பவருக்கும் திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டது. மேலும் நிச்சயதார்த்தமும் நடந்திருந்தது. இவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு (2023) ஜனவரியில் நடக்க இருந்தது. முகமது ஷெரீப் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் திருமணத்துக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் திருமணத்துக்கு புதிய ஆடைகள் எடுப்பதற்காக ஆயிஷாவும், முகமது ஷெரீப்பும் மோட்டார் சைக்கிளில் உடுப்பிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் ஆடை எடுத்துவிட்டு பைந்தூர் நோக்கி திரும்பி வந்தனர்.
இளம்பெண் சாவு
அப்போது அவர்கள் உச்சிலா பகுதியில் வந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆயிஷா, லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். முகமது ஷெரீப் பலத்த காயம் அடைந்தார். இந்த விபத்தை பார்த்தவர்கள், முகமது ஷெரீப்பை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் படுபித்ரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் உயிரிழந்த ஆயிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
இதுகுறித்து படுபித்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.