சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்: கர்நாடகத்தில் மின் கட்டணம் குறித்து 'பெஸ்காம்' விளக்கம்
சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் தொடர்பாக பெஸ்காம் மின் கட்டணம் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
பெங்களூரு:
நிலையான கட்டணம்
கர்நாடகத்தில் மின் கட்டணம் குறித்து சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரவியது. அதாவது பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்), தனது அதிகாரத்தை மீறி சில கட்டணங்களை வசூலிப்பதாக கூறப்பட்டது. இதற்கு பெஸ்காம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பெஸ்காம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெஸ்காமிற்கு நிலையான மின் கட்டணத்தை வசூலிக்க அதிகாரம் இல்லை என்று சமூக வலைத்தளத்தில்புட்டேகவுடா என்பவர் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டண ரசீதில் நிலையான கட்டணம் ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.100-ம், 2 கிலோ வாட் என்றால் ரூ.220-ம் வசூலிக்கப்படுகிறது.
உள்கட்டமைப்பு வசதிகள்
இந்த கட்டணத்தை கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளது. மின்சார பயன்பாட்டு அளவு மீது இந்த கட்டணம் விதிக்கப்படு இல்லை. நுகர்வோர் மின்சாரத்தை பயன்படுத்தாவிட்டாலும் இந்த நிலையான கட்டணத்தை அவசியம் செலுத்த வேண்டும். நுகர்வோருக்கு வழங்கப்படும் மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், நிர்வாக செலவுகளுக்காக இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலக்கரி கொள்முதல் விலையின் அடிப்படையில் சீரமைவு (அட்ஜஸ்ட்மென்டு) கட்டணத்தை ஒழுங்குமுறை ஆணையம் மாற்றி அமைக்கிறது. இந்த கட்டணம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. மேலும் நுகர்வோர் தாங்கள் பெற்ற கிலோ வாட்டை விட கூடுதலாக மின்சாரத்தை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படுகிறது. மின் கட்டணத்தை குறித்த காலத்திற்குள் செலுத்தாத நுகர்வோரிடம் வட்டி வசூலிக்கப்படுகிறது. அதனால் கட்டணம் குறித்து தவறான தகவல்களை நுகர்வோர் நம்ப வேண்டாம்.
இவ்வாறு பெஸ்காம் தெரிவித்துள்ளது.