பெங்களூருவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

பெங்களூருவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-07-31 16:56 GMT

பெங்களூரு:

50 மில்லி மீட்டர் மழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக சற்று குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக பெங்களூருவில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. பல்வேறு சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஆட்டோக்கள் மற்றும் சிறிய ரக கார்கள் மழைநீரில் சிக்கி செல்ல முடியாமல் திணறின. இதனால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெங்களூருவில் எலக்ட்ரானிக் சிட்டி, பெங்களூரு நகரத்தில் 50 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இடி-மின்னல்

பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக குடகில் 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பெங்களூருவில் 50 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பெங்களூருவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு அதாவது மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். சில நேரங்களில் இடி-மின்னலும் இருக்கும். கர்நாடகத்தின் தென் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சில நேரங்களில் காற்று 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் இந்த எச்சரிக்கையால், பெங்களூருவில் ராஜகால்வாய் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுன் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் நேற்று மதியம் வரை வெயில் தாக்கம் இருந்த நிலையில் 2 மணிக்கு லேசான மழை பெய்தது. சிறிய நேரம் மழை பெய்த பிறகு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்