பெங்களூருவில் 1.20 லட்சம் இளம் வாக்காளர்கள் உள்ளனர்; மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தகவல்

ெபங்களூருவில் 1.20 லட்சம் இளம் வாக்காளர்கள் உள்ளனர் என்று பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-08 18:45 GMT

பெங்களூரு:

வாக்காளர்கள் திருவிழா

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெங்களூரு மாநகராட்சி மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் பெங்களூரு சர்ச் தெருவில் வாக்காளர்கள் திருவிழா என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பெங்களூருவில் ஒவ்வொரு தேர்தலிலும் குறைவான வாக்குகளே பதிவாகி வருகிறது. இதனை தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது.

1.20 லட்சம் இளம் வாக்காளர்கள்

பெங்களூருவில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளையும், வாக்காளர்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் தவறாமல் வாக்களிப்பது குறித்து ரெசிடன்ட் வெல்பேர் அசோசியோசன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் 1.20 லட்சம் இளம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த புதிய மற்றும் இளம் வாக்காளர்கள் எக்காரணத்தை கொண்டும் வாக்களிக்காமல் இருக்க கூடாது. அவர்கள் தங்களது உரிமையை நிலை நாட்ட வாக்கு அளிக்க வேண்டும். இதுதொடர்பாகவும் இளம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஐ.டி. நிறுவனங்களுடன் பேச்சு

குறிப்பாக ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வாக்களிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் தங்களது ஊழியர்களை வாக்களிக்க அறிவுறுத்தி வருகின்றனர். எனவே முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் ஐ.டி. ஊழியர்கள் கண்டிப்பாக வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்