பெங்களூரு முன்னாள் கலெக்டரின் பணி இடைநீக்கம் செல்லும்

பெங்களூரு முன்னாள் கலெக்டரின் பணி இடைநீக்கம் செல்லும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-12-08 18:45 GMT

பெங்களூரு:-

பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் குறித்து அல்சூர்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் பெங்களூரு மாவட்ட கலெக்டராக இருந்த சீனிவாசுக்கு, சிலுமே நிறுவனத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சீனிவாஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கர்நாடக அரசுக்கு, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

அதன்பேரில், வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சீனிவாஸ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் அல்சூர் கேட் போலீசார் விசாரணையும் நடத்தி உள்ளனர். இதற்கிடையே தன்னை பணி இடைநீக்கம் செய்ததை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சீனிவாஸ் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி நரேந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சீனிவாஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் சீனிவாசுக்கு எந்த தொடர்பும் இல்லை. அதற்கான ஆதாரங்களும் இல்லை. எனவே அவரை பணி இடைநீக்கம் செய்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நரேந்தர், பெங்களூரு மாவட்ட கலெக்டராக இருந்த சீனிவாசை பணி இடைநீக்கம் செய்தது செல்லும் என்றும், அதற்கு தடை விதிக்க முடியாது என்றும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்