பாலியல் தொல்லை வழக்கு: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட்

தேவைப்பட்டால் எடியூரப்பாவை கைது செய்வோம் என்று கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.;

Update:2024-06-13 17:42 IST

பெங்களூரு,

கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா, 17 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் 54 வயது தாயார், கடந்த மார்ச் 14ம் தேதி அன்று சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், 2 பிரிவுகளின் கீழ் எடியூரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரில், "கல்வி தொடர்பாக தனது மகளுக்கு நீதி கிடைக்க எடியூரப்பாவின் உதவியை நாட அவரது வீட்டிற்கு சென்றோம். அப்போது எங்களது குறைகளை சில நிமிடங்கள் கேட்ட எடியூரப்பா, பின்னர் எனது மகளை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக" குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு, பெங்களூரு போலீசாரிடம் இருந்து சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து சி.ஐ.டி. அதிகாரிகள் எடியூரப்பாவின் வாக்குமூலத்தை பதிவுசெய்தனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி. நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட் பிறபித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, இந்த வழக்கில் தேவைப்பட்டால் எடியூரப்பா கைது செய்யப்படுவார் என கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நடைமுறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சி.ஐ.டி. போலீசார் ஜூன் 15ம் தேதிக்கு முன்னதாகவே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விடுவார்கள். அதன்பின் அவர்கள் நடைமுறையை பின்பற்றுவார்கள். எடியூரப்பாவின் வாக்குமூலத்தை பெறுவார்கள். அவசியம் என்றால் சி.ஐ.டி. போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார். அது அவசியமா என்று என்னால் சொல்ல முடியாது. சி.ஐ.டி. அதிகாரிகள் சொல்வார்கள். அவர்கள் அவசியம் என்று உணர்ந்தால், அதை செய்வார்கள்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்