பெங்களூருவில் தனியார் பள்ளியில் கிடந்த ஜெலட்டின் குச்சிகளால் பரபரப்பு

ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பரபரப்பு ஓய்வதற்குள், பெங்களூவில் தனியார் பள்ளியில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-03-19 18:57 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் கடந்த 1-ந் தேதி புரூக்பீல்டு பகுதியில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கபே என்னும் பிரபல ஓட்டலில் 2 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார், தேசிய விசாரணை முகமை உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் ராமேஸ்வரம் கபே ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பரபரப்பு ஓய்வதற்குள், பெல்லந்தூர் அருகே சிக்கநாயக்கனஹள்ளியில் தனியார் பள்ளி வளாகத்தில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு பெல்லந்தூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

அந்த பள்ளிக்கு சொந்தமான காலி நிலப்பகுதியில் மர்மபொருட்கள் கிடந்தன. கடந்த 2 நாட்களுக்கும் மேலாக அவை அங்கு கிடந்ததால், சந்தேகம் அடைந்த அந்த பகுதியினர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மர்மபொருட்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அப்போது அவை ஜெலட்டின் குச்சிகள் என்பது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கல்குவாரியில் பாறைகளை தகர்ப்பதற்காக ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்தது தெரிந்தது. எனினும் அவை சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்