பெங்களூரு: மகனை கொன்ற பெண் தொழில் அதிபர் எழுதிய கடிதம் சிக்கியது

சுசனா சேத்தின் கைப்பையில் இருந்து கிழிந்து துண்டு, துண்டாக கசங்கிய நிலையில் கிடந்த ஒரு ‘டிஸ்யூ’ காகிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

Update: 2024-01-13 01:04 GMT

பெங்களூரு,

பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுசனா சேத்(வயது 39). தொழில் அதிபர். இவரது கணவர் வெங்கட்ராமன். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழும் நிலையில், இவர்களது 4 வயது மகனை சுசனா சேத் கோவாவுக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்தார்.

மகனை கொலை செய்த பின்னர் அவனது உடலை சூட்கேசில் வைத்துக் கொண்டு பெங்களூருவுக்கு கோவாவில் இருந்து வாடகை காரில் புறப்பட்டு வந்தபோது போலீசில் பிடிபட்டார். அவரை கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை சுசனா சேத்தை வடக்கு கோவாவில் உள்ள கன்டோலிமில் பகுதியில் அரசு ஆஸ்பத்திரிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அப்போது சுசனா சேத் முகத்தை துணியால் மூடியிருந்தார். அவருக்கு அங்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதாவது ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்பட விசாரணை கைதிக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. ஏற்கனவே சுசனா சேத்துக்கு போலீசார் மனநல பரிசோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மகனை கொன்றதும் சுசனா சேத் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்து இருந்தார். அதற்கு தற்போது டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து உள்ளனர். அவரது கையில் கட்டும் போட்டுள்ளார். நேற்று அவர் தனது கை வலிப்பதாக கூறி கண் கலங்கி இருக்கிறார். அப்போது அவருக்கு பெண் போலீசார் குடிக்க தண்ணீர் கொடுத்து தேற்றி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சுசனா சேத்தின் கைப்பையில் இருந்து கிழிந்து துண்டு, துண்டாக கசங்கிய நிலையில் கிடந்த ஒரு 'டிஸ்யூ' காகிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மகனை கொன்றதற்கான காரணத்தை அதில் ஐலேனர் (கண் மை) மூலம் எழுதியுள்ளார். அந்த துண்டு காகிதங்களை போலீசார் ஒன்று சேர்த்து பார்த்தபோது அதில் எனது மகனை என்னுடைய கணவர் சந்திக்க கோர்ட்டு அனுமதி அளித்தது பிடிக்கவில்லை என அவர் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. எனவே ஆத்திரத்தில் அவர் மகனை கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

மேலும் சுசனா சேத் எழுதிய டிஸ்யூ பேப்பர் கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி சீல் வைத்து ஆய்வுக்காக தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த கடிதத்தை சுசனா சேத் தான் எழுதினாரா? அதில் உள்ளது அவரது கையெழுத்து தானா? என தடய அறிவியல் துறையில் ஆய்வு செய்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்