மேற்கு வங்காளம்; ஹவுரா பகுதிக்கு செல்ல முயன்ற சுவேந்து அதிகாரி தடுத்து நிறுத்தம்

வன்முறை நடைபெற்ற ஹவுரா பகுதிக்கு செல்ல முற்பட்ட பாஜக தலைவரும் மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Update: 2022-06-12 11:33 GMT

கொல்கத்தா,

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த நூபுர் சர்மா, டி.வி. விவாதம் ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் நபிகள் நாயகம் பற்றி ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டார். இதில் நுபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்து மற்றொரு பா.ஜ.க. நிர்வாகியான நவீன் ஜிண்டால் கருத்து வெளியிட்டார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் 57 இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்புக்கு வழி வகுத்தது. சர்ச்சைக்குரிய பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீதும் கட்சி மேலிடம் நடவடிகை எடுத்துள்ளது. இதற்கிடையே, நூபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், மேற்கு வங்காளத்தின் ஹவுரா பகுதியில் வன்முறை வெடித்தது. இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றம் தொடர்ந்து நீடிப்பதால் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

இந்த சூழலில், வன்முறை நடைபெற்ற ஹவுரா பகுதிக்கு செல்ல முற்பட்ட பாஜக தலைவரும் மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர். சுவேந்து அதிகாரி சென்றால் ஹவுரா பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை தடுத்து நிறுத்தியதாக மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்