காதலித்து விட்டு வேறொருவருடன் திருமணம்; ஆசிட் வீசிய நபர் என்கவுண்ட்டரில் கைது

அரை மணிநேர என்கவுண்ட்டருக்கு பின்னர் அனில் மற்றும் பச்சனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-11-19 16:36 GMT

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் நகரில் தரவுலா கிராமத்தில் வசித்து வருபவர் சுமன் யாதவ் (வயது 23). அனில் வர்மா என்பவருடன் சில ஆண்டுகளாக ஒன்றாக பழகி வந்துள்ளார். அது காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், 3 மாதங்களுக்கு முன், சுமனுக்கு வேறொருவருடன் திருமணம் செய்ய முடிவானது. வருகிற டிசம்பர் 11-ந்தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது.

இதனால், ஆத்திரமடைந்த அனில், அவரை பழிவாங்க திட்டமிட்டார். இதற்காக தன்னுடைய மருந்து கடையில் வேலை செய்து வந்த ராம் பச்சன் என்பவருக்கு ரூ.15 ஆயிரம் பணம் கொடுத்து, ஆசிட் வீசும்படி கூறியுள்ளார்.

இதன்படி, அவருடைய காரில் இருந்த பேட்டரியில் இருந்து ஆசிட் எடுத்து கொடுத்தும், அறுவை சிகிச்சைக்கு பயன்படும் இரண்டு கையுறைகளையும் பச்சனிடம் கொடுத்துள்ளார்.

திட்டமிட்டபடி, அனில் தன்னுடைய காரில் சுமன் யாதவ் மற்றும் அவருடைய தாயாரை அழைத்து சென்று மருந்து கடைக்கு சற்று தொலைவில் இறக்கி விட்டுள்ளார்.

இதன்பின் பச்சனை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசிய அனில், ஆசிட் வீசும்படி கூறியுள்ளார். இதில், ஆசிட் வீசியதில் சுமனின் முகத்திலும், அவருடைய தாயாரின் கைகளிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

திட்டத்தின் ஒரு பகுதியாக, 5 நிமிடங்கள் சென்ற பின்னர் அனில், காயமடைந்த சுமனை மீட்டு, கோரக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார். போலீசிடம் எதுவும் கூற வேண்டாம் என அறிவுறுத்தலும் வழங்கினார்.

சி.சி.டி.வி. காட்சிகளின்படி போலீசார் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, நள்ளிரவில் நடந்த அரை மணிநேர என்கவுண்ட்டருக்கு பின்னர் அனில் மற்றும் பச்சனை போலீசார் கைது செய்தனர். சிகிச்சைக்கு பின்னர் சுமனின் நிலைமை சீராகி வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்