ராமர் கோவில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் என சாத்தியமற்றதாக தோன்றியதை மோடி அரசு சாத்தியமாக்கி விட்டது - அமித்ஷா

ராமர் கோவில் மற்றும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் என முன்பு சாத்தியமற்றதாக தோன்றிய அனைத்தையும் மோடி அரசு சாத்தியமாக்கி விட்டதாக உள்துறை மந்திரி அமித்ஷா பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Update: 2022-10-15 17:39 GMT

தேர்தல் பிரசாரம்

இமாசல பிரதேசத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதனால் மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

அந்தவகையில் ஆளும் பா.ஜனதா சார்பில் சிர்மார் மாவட்டத்தில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் சாதனைகளை வெளியிட்டு பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கிண்டல்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 திரும்ப பெறப்படும் என நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? ஆனால் மோடி அரசு அதை சாதித்து விட்டது.

இந்த 370-வது சட்டப்பிரிவு குறித்து காங்கிரஸ் தலைவர்களிடமோ, தொண்டர்களிடமோ நீங்கள் பேசினால், அவர்கள் மவுனமாகி விடுவார்கள். ஏனெனில் இந்த சிறப்பு அந்தஸ்து ஜவகர்லால் நேருவால் உருவாக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோவிலை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியினர் நம்மை கிண்டல் செய்து கொண்டே இருந்தனர். 'கோவில் கட்டப்படும், ஆனால் தேதி சொல்ல முடியாது' என கூறி வந்தனர்.

ஆனால் அயோத்தியில் கோவில் கட்டுமான பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்து விட்டார்.

அந்தவகையில் ராமர் கோவிலோ அல்லது காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கமோ, முன்பு சாத்தியமற்றதாக தோன்றிய அனைத்தையும் மோடி அரசு சாத்தியமாக்கி விட்டது.

பழங்குடியினர் பட்டியல

ராஜா, ராணி காலம் முடிந்து விட்டது. டெல்லி ராஜபாதையின் பெயரை கடமை பாதையாக மாற்றியதுடன், அங்கு பிரமாண்ட நேதாஜி சிலையையும் பிரதமர் மோடி நிறுவி இருக்கிறார்.

உலக அளவில் இந்திய பொருளாதாரத்தை 11-ம் இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு வெறும் 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி கொண்டு வந்து விட்டார்.

ஹட்டி சமுகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததன் மூலம் அவர்களின் 55 ஆண்டு கால போராட்டத்துக்கு பிரதமர் மோடி முடிவு கட்டியுள்ளார். இதன் மூலம் 1.60 லட்சம் பேர் பலனடைவார்கள்.

ஆனால் ஹட்டி சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததால், தலித் சமூகத்தின் இடஒதுக்கீடு உரிமை பறிபோய்விடும் என்று காங்கிரஸ் கட்சி அவர்களை தூண்டி விடுகிறது.

ஆளுங்கட்சியை மாற்றும் போக்கு

ஆனால் தலித் பிரிவினர் ஏற்கனவே அனுபவித்து வந்த உரிமைகளை தொடர்ந்து பெறுவார்கள் என உறுதியளிக்க விரும்புகிறேன்.

ஒவ்வொரு தேர்தலிலும் ஆளுங்கட்சியை மாற்றும் இமாசல பிரதேசத்தின் போக்கை மாற்ற வேண்டிய நேரமிது. உத்தரகாண்ட் மக்களும் சமீபத்தில் இதை செய்திருந்தனர்.

எனவே வருகிற தேர்தலிலும் ஆளும் பா.ஜனதாவை வெற்றி பெறச்செய்து மீண்டும் ஆட்சியில் அமர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்