பெங்களூரு மாநகராட்சி தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறும்; மந்திரி ராமலிங்க ரெட்டி தகவல்

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என்றும், பா.ஜனதாவினர் வார்டு மறுவரையறை பணியை சரியாக செய்யாததால் தேர்தல் நடத்த தாமதம் ஆவதாகவும் மந்திரி ராமலிங்க ரெட்டி கூறினார்.

Update: 2023-06-24 22:02 GMT

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என்றும், பா.ஜனதாவினர் வார்டு மறுவரையறை பணியை சரியாக செய்யாததால் தேர்தல் நடத்த தாமதம் ஆவதாகவும் மந்திரி ராமலிங்க ரெட்டி கூறினார்.

மந்திரி தொடங்கி வைத்தார்

கர்நாடகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 300-க்கும் மேற்பட்ட கோவில்களில் வயதானவர்கள் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பெங்களூரு பசவனகுடியில் உள்ள தொட்ட கணபதி கோவிலில் நேற்று வயதானவர்கள் வரிசையில் நிற்காமல் நேரடியாக சாமி தரிசனம் செய்யும் திட்டத்தை போக்குவரத்து மற்றும் அறநிலையத்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் மந்திரி ராமலிங்க ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

10 ஆயிரம் பேர் தரிசனம்

கர்நாடகம் முழுவதும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி நேற்று(நேற்று முன்தினம்) மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் 10 ஆயிரம் முதியோர்கள் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இந்த திட்டத்திற்கு வயதானவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. வரிசையில் நிற்பதால் முதியவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுபற்றி அனைத்து கோவில்களின் பூசாரிகள், அறநிலையத்துறையின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அவர்களது பரிந்துரையின் பேரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்கள் 2 விதமாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.

கோவில்களில் அடிப்படை வசதிகள்

அதன்படி 'ஏ' பிரிவில் 205 கோவில்களும், 'பி' பிரிவில் 396 கோவில்களும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. பொதுவாக கோவில்களுக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று தான் வருகிறார்கள். அவ்வாறு கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டியது அவசியமாகும். குடிநீர், கழிவறை உள்ளிட்டவை அத்தியாவசியமாகும். இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் பார்த்து கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதற்கும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மாநிலத்தில் உள்ள 4 போக்குவரத்து கழகங்கள் மூலமாக ஒரு நாளில் அரசு பஸ்கள் ஒரு லட்சத்து 56 ஆயிரம் டிரிப்கள் மேற்கொள்கின்றன. இவ்வாறு செல்லும் சந்தர்ப்பத்தில் அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கும், கண்டக்டர்களுக்கும், மற்ற பயணிகளுடனும் சிறு, சிறு பிரச்சினைகள் ஏற்படுவது சகஜம்.

ரூ.4 ஆயிரம் கோடி கடன்

ஏனெனில் தினமும் அதிகளவு பெண்கள் கூட்டமாக வந்து பயணிக்கும் போது கண்டக்டர், டிரைவர்களுக்கு சில அழுத்தம் ஏற்படும். பயணிகளும் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதுவரை அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதில் பெரிய அளவில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. கடந்த ஆட்சியின் போது அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 4 ஆயிரம் பஸ்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

அந்த புதிய பஸ்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் போக்குவரத்து கழகங்களுக்கு வந்து சேர உள்ளது. அவற்றில் 95 சதவீத பஸ்கள் சாதாரணமானவை ஆகும். மீதி 5 சதவீத பஸ்கள் தான் சொகுசு வசதிகளை கொண்ட பஸ்கள் ஆகும். கடந்த பா.ஜனதா ஆட்சியில் 4 போக்குவரத்து கழகங்களும் ரூ.4 ஆயிரம் கோடி கடனில் இருந்தது. அந்த கடனில் இருந்து போக்குவரத்து கழகங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டிசம்பரில் தேர்தல்

பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு எடுத்து வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் மாநகராட்சி தேர்தல் நடைபெறும். மாநகராட்சி தேர்தலை கூடிய விரைவிலேயே நடத்த வேண்டும் என்பதே காங்கிரஸ் அரசின் நோக்கமாகும். ஆனால் கடந்த பா.ஜனதா ஆட்சியில் அக்கட்சியினர் வார்டு மறுவரையறையை தங்களது இஷ்டத்திற்கு செய்திருந்தனர்.

வார்டு மறுவரையறையை பா.ஜனதாவினர் சரியாக செய்யவில்லை. அரசியல் காரணங்களுக்காக வார்டு மறுவரையறையை பா.ஜனதாவினர் மேற்கொண்டு இருந்தனர். இதுபற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அப்படி இருந்தும் பா.ஜனதாவினர் வார்டு மறுவரையறையை சரியாக செய்யாததால், காங்கிரஸ் சார்பில் பல போராட்டங்களும் நடத்தப்பட்டு இருந்தது.

அரசின் தலையீடு இருக்காது

வார்டு மறுவரையறையை பா.ஜனதாவினர் சரியாக செய்யாததே மாநகராட்சி தேர்தல் தாமதத்திற்கு காரணமாகும். தற்போது வார்டு மறுவரையறை பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் முடிவே இறுதியானது. இதில், அரசின் தலையீடு இருக்காது.

பெங்களூரு மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கை 198-ல் இருந்து 243 ஆக உயர்த்தப்பட்டு இருந்தது. அந்த 243 வார்டுகளுக்கும் வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறும். காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும், சரியான நேரத்தில் நடத்தப்பட்டு இருந்தது. பா.ஜனதா ஆட்சியில் தான் மாநகராட்சி தேர்தல் நடத்த தாமதமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்