சிக்காவி தொகுதியில் 4-வது வெற்றியை ருசிப்பாரா பசவராஜ் பொம்மை?

Update: 2023-05-04 23:04 GMT

கர்நாடக முதல்-மந்திரியாக இருப்பவர் பசவராஜ் பொம்மை. மறைந்த முன்னாள் முதல்-மந்திரி எஸ்.ஆர்.பொம்மையின் மகனான பசவராஜ் பொம்மை கடந்த 1998-ம் ஆண்டு ஜனதாதளம் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். இவர், கடந்த 1998 மற்றும்

2004-ம் ஆண்டு 2 முறை தார்வார் தொகுதியில் மேல்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னாள் முதல்-மந்திரி எச்.கே.பட்டீலின் அரசியல் செயலாளராகவும் பணியாற்றினார்.

இதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு ஜனதாதளம் கட்சியில் இருந்து விலகி பசவராஜ் பொம்மை, பா.ஜனதாவில் சேர்ந்தார். பின்னர் அதே ஆண்டு ஹாவேரி மாவட்டம் சிக்காவி தொகுதியில் பா.ஜனதா சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் செய்யது அசீம்பீர் காதர் பாஷாவை 12,862 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல்-முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தேர்தலில் பசவராஜ் பொம்மை 63,780 வாக்குகளும், செய்யது அசீம்பீர் காதர் பாஷா 50,918 வாக்குகளும் பெற்றிருந்தனர். கர்நாடகத்தில் 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை நடந்த பா.ஜனதா ஆட்சியில் எடியூரப்பா, சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோரின் மந்திரிசபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பசவராஜ் பொம்மை பணியாற்றினார்.

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் சிக்காவி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் 73,007 வாக்குகளை பெற்ற பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் வேட்பாளர் செய்யது அசீம்பீர் காதர் பாஷாவை (63,504 வாக்குகள்) 9,503 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 2-வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் 3-வது முறையாக சிக்காவி தொகுதியில் பா.ஜனதா சார்பில் பசவராஜ் பொம்மை போட்டியிட்டு 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பசவராஜ் பொம்மை 83,868 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட செய்யது அசீம்பீர் காதர் பாஷா 74,603 வாக்குகளும் பெற்றனர். வாக்கு வித்தியாசம் 9,265 ஆகும். இந்த தேர்தலில் தனி பெரும் காட்சியாக உருவெடுத்த பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. இதில் கடந்த 2019-ம் ஆண்டு வரை எடியூரப்பாவின் மந்திரிசபையில் பசவராஜ் பொம்மை, முக்கிய துறைகளான போலீஸ் மற்றும் சட்டத்துறையை தன் வசம் வைத்திருந்தார். இதை

யடுத்து எடியூரப்பா பதவி விலகியதால், பசவராஜ் பொம்மைக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அவருக்கு பா.ஜனதா மேலிடம் முதல்-மந்திரி பதவியை வழங்கியது. 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரை முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். வருகிற சட்டசபை தேர்தலிலும் 4-வது முறையாக சிக்காவி தொகுதியில் பா.ஜனதா சார்பில் பசவராஜ் பொம்மை போட்டியிடுகிறார். அவரது தலைமையில் பா.ஜனதா இந்த தேர்தலை சந்திக்கிறது குறிப்பிடத்தக்கது.

சிக்காவி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முதலில் முகமது யூசுப் சவனூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தார்வாரை சேர்ந்த அவரை சிக்காவியில் நிறுத்தியதற்கு உள்ளூர் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடைசி நேரத்தில் முகமது யூசுப் சவனூா் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக யாசிர் அகமதுகான் பதான் என்பவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்தது. அவர், சிக்காவி தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பசவராஜ் பொம்மை ஆட்சியில் நடந்த பிரச்சினைகளை முன்னிறுத்தியும், பா.ஜனதா சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பதையும் கூறி யாசிர் அகமதுகான் பதான் பிரசாரம் செய்து வருகிறார். இது அவருக்கு எந்த அளவுக்கு 'கை' கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் சசிதர் சன்னபசப்பா யலிகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதல்-மந்திரியாக உள்ள பசவராஜ் பொம்மை தனது தொகுதியான சிக்காவிக்கு ஏராளமான வளர்ச்சி பணிகளை செய்ததால் அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இது அவருக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அவரது ஆட்சி காலத்தில் மாநிலத்தில் ஹிஜாப், கலவரம், பா.ஜனதா பிரமுகர் கொலை உள்ளிட்ட பிரச்சினைகள் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். சிக்காவி தொகுதியில் 4-வது முறையாக பசவராஜ் பொம்மை வெற்றி கனியை ருசிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடந்த தேர்தல்களில் வெற்றி-தோல்வி நிலவரம்

ஆண்டு வெற்றி தோல்வி

1972 மர்தான்சாப்(காங்.)-19,799 ஹனுமந்த்கவுடா(சுயே.)-16,270

1978 மர்தான்சாப்(இந்திரா காங்.)-33,669 பட்டீல் சங்கரகவுடா குலானகவுடா(ஜனதா கட்சி)-22,496

1983 மர்தான்சாப்(காங்.)-26,801 பட்டீல் ஹனுமந்தகவுடா(ஜனதா கட்சி)-24,250

1985 நீலகண்டகவுடா வீரணகவுடா பட்டீல்(சுயே.)-35,075 மர்தான்சாப்(காங்.)-20,736

1989 குனூர் மஞ்சுநாத் சென்னப்பா(காங்.)-40,549 காத்ரி சையத்நூருதீன்(ஜனதாதளம்)-36,035

1994 குனூர் மஞ்சுநாத் சென்னப்பா(காங்.)-23,552 அப்துல்கனி அக்பர்சாஹேப்(சுயே.)-17,778

1999 செய்யது அசீம்பீர் காதர்பாஷா(ஜ.தளம்-எஸ்)-28,725 சங்கரகவுடா பசனகவுடா பட்டீல்(பா.ஜ.க.)-27,084

2004 சிந்தூரா ராஜசேகர்(சுயே.)-41,811 செய்யது அசீம்பீர் காதர்பாஷா(காங்.)-40,971

2008 பசவராஜ் பொம்மை(பா.ஜ.க.)-63,780 செய்யது அசீம்பீர் காதர்பாஷா(காங்.)-50,918

2013 பசவராஜ் பொம்மை(பா.ஜ.க.)-73,007 செய்யது அசீம்பீர் காதர்பாஷா(காங்.)-63,504

2018 பசவராஜ் பொம்மை(பா.ஜ.க.)-83,868 செய்யது அசீம்பீர் காதர்பாஷா(காங்.)-74,603

Tags:    

மேலும் செய்திகள்