சட்டசபை தேர்தலை பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா சந்திக்கும் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறினார்.

Update: 2023-01-20 20:49 GMT

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு திருவிழா

சிக்கமகளூருவில் ஒவ்வொரு ஆண்டும் சிக்கமகளூரு திருவிழா நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான சிக்கமகளூரு திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. அதையடுத்து கடந்த 19-ந் தேதி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. நேற்று முன்தினம் 2-வது நாள் நிகழ்ச்சிகள் நடந்தன.

சிக்கமகளூரு டவுனில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்தில் அமைந்திருக்கும் சந்திரதிரிகோண மண்டபத்தில் நடந்த கலை நிகழ்ச்சியை மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி,முருகன் ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர். பின்னர் விழாவில் மத்திய மந்திரி முருகன் பேசியபோது கூறியதாவது:-

ஒற்றுமையாக வாழ வேண்டும்

ஒரே பாரதம், ஒரே தாய். நாம் அனைவரும் ஒரே பாரத தாயின் குழந்தைகள் ஆவோம். அந்த வகையில் காசியில் தமிழ்ச்சங்கத்தின் மூலம் பிரதமர் மோடி யாகம் நடத்தினார். அப்போது மக்களிடையேயான ஒற்றுமை, உறவு குறித்து பேசினார். நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இனியும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

கர்நாடகத்தில் ஸ்ரீரங்கப்பட்டணாவில் ரங்கநாதர் உள்ளார். தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் உள்ளார். இரண்டும் ஒரே கடவுள்தான். காவிரி நீரை அண்ணன் - தம்பி போல் பங்கிட்டு விவசாயம் செய்து வருகிறோம். அந்த ஒற்றுமை உணர்வுடன் நாம் வாழ்வது பெருமையாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். அவர் தனது உரை முழுவதையும் தமிழிலேயே பேசினார். அதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

கர்நாடக சட்டமன்ற தேர்தல்

உலக அளவில் இந்தியா 5-வது வளர்ந்து வரும் நாடாக உள்ளது. இங்கிலாந்தைவிட இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்ததில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி மீண்டும் 2024-ம் ஆண்டு பிரதமராவது உறுதி.

சூரியனும், சந்திரனும் உதயம் ஆவது எவ்வளவு உண்மையோ, அதேபோல் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி. கர்நாடக சட்டமன்ற தேர்தலை தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலேயே சந்திப்போம். மீண்டும் அவரே முதல்-மந்திரி ஆவார். காங்கிரசார் வாய்க்கு வந்ததுபோல் பேசக்கூடாது. ராகுல் காந்தி, சித்தராமையா போன்றோர் தங்கள் மனதுக்கு தோன்றியதை எல்லாம் பேசுவது தவறு.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்