மேகதாது திட்டத்துக்கு அனுமதி வழங்கும்படி மத்திய மந்திரியிடம் பசவராஜ் பொம்மை நேரில் வலியுறுத்தல்

மேகதாது திட்டத்துக்கு விரைவாக அனுமதி வழங்க கோரி மத்திய மந்திரி கஜேந்திரசிங் ெஷகாவத்திடம் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-06-17 16:09 GMT

பெங்களூரு: மேகதாது திட்டத்துக்கு விரைவாக அனுமதி வழங்க கோரி மத்திய மந்திரி கஜேந்திரசிங் ெஷகாவத்திடம் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் வலியுறுத்தி உள்ளார்.

மேகதாது திட்டம்

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.9,000 கோடியில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக திட்ட அறிக்கையை தயாரித்து அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த திட்ட அறிக்கை தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தில் உள்ளது. அந்த ஆணையத்தின் கூட்டம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. அன்றைய கூட்டத்தில் மேகதாது திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய அவர், காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க கூடாது என்று கூறியுள்ளார். இதற்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்தார். பிரதமருக்கு தமிழக முதல்-அமைச்சர் கடிதம் எழுதியது, சட்டவிரோதம் என்றும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் கூறினார்.

மத்திய அரசுக்கு அழுத்தம்

இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று டெல்லி சென்று, மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு வலியுறுத்தினார். இந்த சந்திப்புக்கு முன்பு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து விரைவாக முடிவு எடுக்க வேண்டும். அதுகுறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க நான் இங்கு வந்துள்ளேன். இதுகுறித்து மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து பேசுகிறேன். வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய நிகழ்ச்சி நிரலில் மேகதாது திட்டம் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்