'ஊழல்' காங்கிரசின் ஒருங்கிணைந்த பகுதி; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடும் தாக்கு
‘ஊழல்’ காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைந்த பகுதி என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடுமையாக தாக்கி பேசினார்.;
பெலகாவி:
'ஊழல்' காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைந்த பகுதி என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடுமையாக தாக்கி பேசினார்.
லட்சுமண் சவதி
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர் நேற்று பெலகாவி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
லட்சுமண் சவதி பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளார். இப்போது அவர், பா.ஜனதா ஆட்சியில் 40 சதவீத கமிஷன் பெற்றதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை அவர் எங்கள் கட்சியில் இருந்தபோது கூறாதது ஏன்?. எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முதல்-மந்திரியை இலக்காக கொண்டு பா.ஜனதாவின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மக்கள் ஆதரவு
கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் எங்கள் அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஆனால் அது சாத்தியமாகவில்லை. ஏனெனில் காங்கிரஸ் தலைவர்களே பெரிய ஊழல்வாதிகள். காங்கிரஸ் என்றால் ஊழல், ஊழல் என்றால் காங்கிரஸ். ஊழல் காங்கிரசின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி ஆகும். அதனால் ஊழல் ஒழிப்பு பற்றி பேச காங்கிரஸ் தலைவர்களுக்கு தகுதி இல்லை.
லிங்காயத் சமூகம் குறித்து சித்தராமையா தரக்குறைவாக பேசுகிறார். தான் கூறிய கருத்துக்காக வெவ்வேறு விதமாக விளக்கம் அளிக்கிறார். இதுகுறித்து லிங்காயத்துகள் கவலைப்பட மாட்டார்கள். மக்கள் அறிவாளிகள். யாருக்கு எப்போது ஆதரவு அளிக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும். நான் செல்லும் இடங்களில் எல்லாம் பா.ஜனதாவுக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். பெலகாவியில் மட்டும் 18 தொகுதிகள் உள்ளன. அதில் 15 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும்.
தேர்தல் வியூகம்
நான் மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்கிறேன். கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். கருத்து கணிப்பு முடிவுகள் அடிப்படையில் நாங்கள் தேர்தல் வியூகம் வகுப்பது இல்லை. நாங்கள் தனிப்பட்ட முறையில் நடத்தும் கருத்து கணிப்பு அடிப்படையில் தேர்தல் வியூகம் வகுக்கிறோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.