கர்நாடகத்தில் இயற்கை விவசாயத்தின் பரப்பு மேலும் ஒரு லட்சம் ஏக்கர் அதிகரிக்கப்படும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கர்நாடகத்தில் இயற்கை விவசாயத்தின் பரப்பு மேலும் ஒரு லட்சம் ஏக்கர் அதிகரிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

Update: 2022-10-06 20:53 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் இயற்கை விவசாயத்தின் பரப்பு மேலும் ஒரு லட்சம் ஏக்கர் அதிகரிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

விவசாயத்தில் தொழில்நுட்பம்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இயற்கை விவசாயம் மற்றும் டிஜிட்டல் விவசாயம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் இருந்தபடி காணொலி மூலமாக கலந்து கொண்டு பேசியதாவது:-

நில தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் ஏற்கனவே நாங்கள் விவசாயத்தில் தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளோம். 62 லட்சம் பேருக்கு நிலம் உள்ளது. 16 லட்சம் பேருக்கு நிலம் இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை தொழில்நுட்பத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம். இந்த திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்ற தொடங்கியுள்ளன. இந்த தொழில்நுட்பத்தை நாங்கள் தொடர்ந்து சீர்திருத்தம் செய்து வருகிறோம்.

நீண்டகால திட்டம்

விவசாயத்துறையில் 'நானோ யூரியா' புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் நானோ யூரியா தயாரிக்கும் நிலையம் பெங்களூருவில் தொடங்கப்பட்டது. இதை விவசாயிகளுக்கும் வழங்கியுள்ளோம். இதற்கு வரும் நாட்களில் தேசிய அளவில் நல்ல வரவேற்பு கிடைக்கும். டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளே தங்கள் பயிர்களை அளவீடு செய்கிறார்கள். இதுவரை 211 கோடி நிலப்பகுதிகள் டிஜிட்டல் மயம் ஆக்கப்பட்டுள்ளது.

இதில் 1.61 கோடி நிலப்பகுதி அளவீட்டு பணிகளை விவசாயத்துறை செய்துள்ளது. 100 சதவீதம் விவசாயிகளின் நிலத்தை அளவீடு செய்யும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மிகவும் நேர்மையான முறையில் இந்த பணியை மேற்கொள்கிறார்கள். இயற்கை விவசாயம் என்பது நீண்டால திட்டம் ஆகும். பிரதமர் மோடியின் விருப்பப்படி விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக அதிகரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இயற்கை விவசாயம்

அத்துடன் கர்நாடகம், மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்கள் இயற்கை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. கர்நாடகத்தில் 5 விவசாய மற்றும் தோட்டக்கலை பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் மேற்பார்வையில் தலா ஆயிரம் ஏக்கரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயிர்களின் தரம், உற்பத்தி பொருட்கள், சோதனைகள் போன்றவை பல்கலைக்கழக சோதனை கூடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

கர்நாடகத்தில் 2.4 லட்சம் ஏக்கர் நிலபரப்பில் இயற்கை விவசாயம் செய்யப்படுகின்றன. வருகிற மார்ச் மாதத்திற்குள் மேலும் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை விவசாய பரப்பில் சேர்க்கப்படும். இந்த இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள 41 ஆயிரத்து 434 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு இதுவரை 1,100 பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

மண்ணின் பலம்

இயற்கை விவசாயத்தில் அறிவியல் பூர்வமான அம்சங்களை கவனத்தில் வைத்து மண்ணின் தரத்தை காப்பாற்றவும் அதிக அழுத்தம் கொடுக்கிறோம். மண்ணின் பலத்தை அதிகரிக்க இயற்கை உரம் பயன்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் நல்ல ஆதரவு வழங்குகிறார்கள்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்