1,800 கிராம பஞ்சாயத்துகளை மேம்படுத்த திட்டம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
கர்நாடகத்தில் எல்லைகளில் உள்ள 1,800 கிராம பஞ்சாயத்துகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெலகாவி:
கர்நாடகத்தில் எல்லைகளில் உள்ள 1,800 கிராம பஞ்சாயத்துகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
கிராம பஞ்சாயத்துகள்
பெலகாவி மாவட்டம் ராமதுர்காவில் அரசு திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
கல்யாண-கர்நாடக பகுதியில் பீதர், கலபுரகி, யாதகிரி, பெலகாவி, விஜயாப்புரா மாவட்டங்களில் உள்ள எல்லை பகுதியில் 2 முக்கியான திட்டங்களை செயல்படுத்துகிறோம். மராட்டியம், தமிழ்நாடு, கோவா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களின் எல்லை பகுதியில் உள்ள 1,800 கர்நாடக கிராம பஞ்சாயத்துகளை முழுவதுமாக மேம்படுத்த ஒரு திட்டத்தை வகுத்துள்ளோம்.
சாலைகள் தரம் உயர்வு
அந்த பகுதியில் உள்ள சாலைகள் தரம் உயர்த்தப்படும். மேலும் அந்த கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படும். மேலும் எல்லையில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்படும். கோவாவில் ரூ.10 கோடியில் கன்னட பவன் கட்டப்படும். சோலாப்பூர், காசர்கோட்டிலும் கன்னட பவன் கட்ட தலா ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும்.ரூ.120 கோடி செலவில் மல்லபிரபா ஆற்றின் கரையோரத்தில் சுற்றுச்சுவர் கட்டப்படும். கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 8 ஆயிரம் பள்ளி வகுப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. 100 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுகின்றன.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.