காங்கிரசில் எத்தனை ரவுடிகள் உள்ளனர்?; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேள்வி

காங்கிரசில் எத்தனை ரவுடிகள் உள்ளனர்? என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2022-11-29 18:45 GMT

பெங்களூரு:

காங்கிரசில் எத்தனை ரவுடிகள் உள்ளனர்? என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்-மந்திரி பசவசராஜ் பொம்மை டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சுற்றுச்சூழல் திட்டங்கள்

பா.ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. அவரை சந்திக்க நாளை(இன்று) அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். மத்திய மந்திரிகள் கஜேந்திரசிங் ஷெகாவத், பூபேந்திரயாதவ், ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்திக்க உள்ளேன். கஜேந்திரசிங் ஷெகாவத்துடன் மேகதாது திட்டம், பத்ரா மேலணை திட்டம் குறித்து விவாதிக்க இருக்கிறேன். பெலகாவி மாவட்டம் சங்கொள்ளியில் சுதந்திர போராட்ட தியாகி ராயண்ணா பெயரில் நாங்கள் ராணுவ பள்ளியை அமைத்துள்ளோம். இந்த பள்ளியின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள ராஜ்நாத்சிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளோம். சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்களுக்கு அனுமதி பெறும் நோக்கத்தில் மத்திய மந்திரி பூபேந்திர யாதவை சந்திக்க உள்ளேன்.

எத்தனை ரவுடிகள்

ரவுடி 'சைலண்ட் சுனில்', பா.ஜனதா எம்.பி.க்களுடன் விழாவில் கலந்து கொண்டதை காங்கிரசார் விமர்சிக்கிறார்கள். காங்கிரசில் எத்தனை ரவுடிகள் உள்ளனர் என்பதை அக்கட்சி தலைவர்கள் எண்ண வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மத்திய தொழில்துறை மந்திரி பியூஸ்கோயலை பசவராஜ் பொம்மை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்