தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை படுஜோர்
கோலார் மாவட்டத்தில் தடை செய்யப்பட் கேரள லாட்டரி சீட்டு விற்பனை படுஜோராக நடப்பதாகவும், இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கோலார் தங்கவயல்
கேரள லாட்டரி சீட்டு விற்பனை
கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது. அண்டை மாநிலமான கர்நாடகத்திலும் கேரள லாட்டரி சீட்டு விற்பனை நடந்தது.
ஆனால், ஏராளமான ஏழை குடும்பங்கள் லாட்டரி சீட்டால் பாதிக்கப்பட்டதால், கர்நாடக அரசு கேரள லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்தது. ஆனால், தடையை மீறி மாநிலத்தில் பல பகுதிகளில் கேரள லாட்டரி சீட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல், கோலார் மாவட்டத்திலும் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. கோலார் தங்கவயல், பங்காருபேட்டை, கோலார், மாலூர் ஆகிய பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஆன்லைனிலும் விற்கப்பட்டு வருகிறது.
சமூக ஆா்வலர்கள் கோரிக்கை
குறிப்பாக தங்கவயலில் ஆண்டர்சன்பேட்டை, ராபர்ட்சன்பேட்டை பகுதிகளில் பெட்டி கடைகளில் கூட கேரள லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது. அந்த லாட்டரி சீட்டுகளை ஏழை குடும்பங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வாங்கி செல்கிறார்கள்.
தங்களுக்கு பரிசு கிடைக்கும் என்ற ஆசையில் லாட்டரி சீட்டுகளை வாங்கி செல்கிறார்கள். இதனால், அவர்களுக்கு பரிசு எதுவும் கிடைக்காமல் பணத்தை இழந்து வருகிறார்கள்.
இதனால், லாட்டரி சீட்டுகளை வாங்கி ஏழை குடும்பங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். இதனால் கோலார் மாவட்டத்தில் கேரள லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.