பஞ்சாரா சமூகத்தினர் தொடர் போராட்டம்
சிவமொக்காவில் பஞ்சாரா சமூகத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சிவமொக்கா-பத்ராவதி சாலையில் டயரை கொளுத்தி போட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சிவமொக்கா-
சிவமொக்காவில் பஞ்சாரா சமூகத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சிவமொக்கா-பத்ராவதி சாலையில் டயரை கொளுத்தி போட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
உள் இடஒதுக்கீடு
கர்நாடகத்தில் தலித் சமூகத்தில் உள்ள சிறிய சமூகங்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கும், நீதிபதி சதாசிவா அறிக்கையை அமல்படுத்தவும் எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாரா சமூகத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு எடியூரப்பா வீட்டின் மீது கற்களை வீசி தாக்கிய அவர்கள், டயர்களை சாலையில் போட்டு கொளுத்தி போட்டனர்.இதனால் போலீசார், அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும், பஞ்சாரா சமூகத்தினர் உள் இட ஒதுக்கீட்டை வாபஸ் பெற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று காலையில் 11 மணி அளவில் சிவமொக்கா-பத்ராவதி சாலையில் மலவகொப்பா பகுதியில் பஞ்சாரா மற்றும் போவி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையின் நடுவே டயரை கொளுத்திப் போட்டு போக்குவரத்து தடை ஏற்படுத்தினர்.
இதனால் அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் ேபாலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பஞ்சாரா மக்கள், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்