இந்தியாவுக்குள் நுழைய முயன்ற வங்காளதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் - பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சுடு - ஒருவர் பலி
மேற்குவங்காள எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற வங்காளதேச போதைப்பொருள் கடத்தல்காரனை எல்லைப்பதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
கொல்கத்தா,
வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர், அடையாள அட்ட்டையும் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர்.
அதேவேளை, வங்காளதேசம், மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், மேற்குவங்காளத்தின் நதியா மாவட்டம் ஹன்ஸ்ஹலி நகரில் கிருஷ்ணாநகர் செக்டார் பகுதியில் வங்காளதேச எல்லையில் இந்திய எல்லைப்பாதுக்காப்பு படையினர் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, வங்காளதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 6 பேர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர். அந்த 6 பேரையும் கண்ட இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது, அந்த 6 பேர் கொண்ட வங்காளதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் கூர்மையான ஆயுதங்களை கொண்டு பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலால் அதிர்ச்சியடைந்த எல்லைப்பாதுகாப்பு படையினர் அதிரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் வங்காளதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த அப்ரிபுல் மண்டல் என்ற நபர் கொல்லப்பட்டார். எஞ்சிய அனைவரும் வங்காளதேச எல்லைக்குள் சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தையடுத்து எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.