பெங்களூரு மாநகராட்சி வார்டு மறுவரையறையை ரத்து செய்ய வேண்டும்-அரசு தலைமை கொறடா ஐகோர்ட்டில் வழக்கு

பெங்களூரு மாநகராட்சி வார்டு மறுவரையறையை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் அரசு தலைமை கொறடா மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2022-09-09 21:14 GMT

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி வார்டு மறுவரையறையை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் அரசு தலைமை கொறடா மனு தாக்கல் செய்துள்ளார்.

வார்டு மறுவரையறை குழு

பெங்களூரு மாநகராட்சியில் 198 வார்டுகள் இருந்தன. இந்த வார்டுகளின் எண்ணிக்கையை மாநில அரசு 243 ஆக உயர்த்தியுள்ளது. மாநகராட்சி தலைமை கமிஷனர் தலைமையில் வார்டு மறுவரையறை குழு அமைக்கப்பட்டது. அந்த குழு வார்டுகளை மறுசீரமைத்து அதன் அறிக்கையை மாநில அரசிடம் தாக்கல் செய்தது. இதற்கிடையே பெங்களூரு மாநகராட்சிக்கு 8 வாரங்களுக்கு பிறகு தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

வார்டு மறுவரையறை அறிக்கையை மாநில அரசு ஏற்றுக்கொண்டது. அதற்கான வார்டு இட ஒதுக்கீட்டு பட்டியலையும் வெளியிட்டுவிட்டது. இந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த அரசு தலைமை கொறடாவான சதீஸ்ரெட்டி எம்.எல்.ஏ., கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

மாநகராட்சி தேர்தலை ஒத்திவைக்க...

அதில், தனது பொம்மனஹள்ளி மற்றும் பெங்களூரு தெற்கு தொகுதிக்கு ஹுலிமாவு வார்டில் உள்ள பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும், இது பெங்களூரு மாநகராட்சி சட்டத்திற்கு எதிராக உள்ளதாகவும், அதனால் வார்டு மறுவரையறையை ரத்து செய்யுமாறும் கோரியுள்ளார்.

மாநில அரசின் முடிவுக்கு எதிராக ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வே வழக்கு தொடர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பெங்களூரு மாநகராட்சி தேர்தலை ஒத்திவைக்க பா.ஜனதா மேற்கொண்டுள்ள தந்திரம் என்று சிலர் கூறுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்