தமிழகத்திற்கு நீர் திறப்பதை கண்டித்து முழுஅடைப்பு; பெங்களூருவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழகத்திற்கு நீர் திறப்பதை கண்டித்து நேற்று பெங்களூருவில் நடந்த முழுஅடைப்பு போராட்டத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆயிரக் கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-09-27 00:15 IST

பெங்களூரு:

தமிழகத்திற்கு நீர் திறப்பதை கண்டித்து நேற்று பெங்களூருவில் நடந்த முழுஅடைப்பு போராட்டத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆயிரக் கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.

முழு அடைப்பு

கர்நாடகத்தில் பருவமழை பொய்த்துப்போன நிலையிலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மண்டியாவில் கடந்த 18-ந் தேதி விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். அங்கு விவசாயிகள் தொடர்ந்து தினமும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்கம் ஆகியவை சார்பில் பெங்களூருவில் 26-ந் தேதி (நேற்று) முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள பெரும்பாலான கன்னட சங்கங்கள் ஆதரவு இல்லை என்று அறிவித்துவிட்டன. அந்த கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகி வாட்டாள் நாகராஜ், வருகிற 29-ந் தேதி கா்நாடகத்தில் நாங்கள் முழு அடைப்பு நடத்துவோம் என்று அறிவித்தார். இதனால் பெங்களூருவில் திட்டமிட்டபடி முழு அடைப்பு போராட்டம் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் பெங்களூருவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கே 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும் முக்கிய தலைவர்களையும் போலீசார் கைது செய்திருந்தனர்.

ஆட்டோக்கள் ஓடவில்லை

ஆனால் கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, திட்டமிட்டபடி பெங்களூருவில் முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி பெங்களூருவில் நேற்று முழு அடைப்பு நடைபெற்றது. சுமார் 50 சதவீத அரசு பி.எம்.டி.சி.(பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம்) பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கே.எஸ்.ஆர்.டி.சி. (கர்நாடக அரசு போக்குவரத்து கழகம்) பஸ்களும் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. வெளியூர்களில் இருந்து அரசு பஸ்கள் பெங்களூருவுக்கு வந்து சென்றன. ஆனால் பஸ்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் பயணிகள் பயணம் செய்தனர்.

பெரும்பாலான பஸ்களில் பயணிகளே இல்லை. பெங்களூருவில் சுமார் 2 லட்சம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. அந்த ஆட்டோக்கள் நேற்று சாலையில் ஓடவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆட்டோக்கள் ஓடின. வாடகை கார்களும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. சுமார் 1½ லட்சம் வாடகை கார்கள் இயக்கப்படவில்லை. இதனால் விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் வாகனங்கள் இன்றி பரிதவித்தனர்.

வணிக வளாகங்கள்

விமானங்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் காலையிலேயே விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். இதனால் அங்கு வாகன நெரிசல் உண்டானது. சரக்கு வாகனங்கள், தனியார் வாகனங்களும் குறைந்த எண்ணிக்கையில் இயங்கியதால், நகரின் முக்கியமான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. எம்.ஜி.ரோடு, லால்பாக் ரோடு, ஜே.சி.ரோடு, சேஷாத்திரி ரோடு, நிருபதுங்கா ரோடு, ஓசூர் ரோடு, மைசூரு ரோடு, பல்லாரி ரோடு, ராஜ்பவன் ரோடு, கஸ்தூரிபா ரோடு, ரிச்மண்ட் ரோடு உள்ளிட்ட பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கடைகள், வணிக நிறுவனங்கள், பெரிய வணிக வளாகங்கள், திரையரங்குகள், உணவகங்கள் மூடப்பட்டு இருந்தன. ஒரு சில குடியிருப்பு பகுதிகளில் காய்கறி கடைகள், பால் விற்பனை நிலையங்கள் திறந்து இருந்தன. ஜெயநகரில் திறந்திருந்த 3 ஓட்டல்கள் மீது மர்மநபர்கள் திடீரென புகுந்து கல்வீசி தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கடை ஊழியர்கள் உடனடியாக ஓட்டல்களை மூடினர். இதன்காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்ததால் அரசு மற்றும் தனியார் பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன.

இந்திரா உணவகங்கள்

மெஜஸ்டிக்கில் உள்ள பி.எம்.டி.சி. பஸ் நிலையத்திற்கு பஸ்கள் எப்போதும் போல் வந்து சென்றன. கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையத்திற்கும் வெளிமாவட்டங்களில் இருந்து பஸ்கள் வந்தன. ஆனால் பயணிகள் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. தமிழ்நாடு பஸ்கள் வராததால், கெங்கேரியில் உள்ள சேட்டிலைட் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. கர்நாடக அரசின் மலிவுவிலை இந்திரா உணவகங்கள் வழக்கம் போல் திறக்கப்பட்டு இருந்தன. ஆனால் உணவு சாப்பிடுவோரின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது.

கர்நாடக நீர் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளரான கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் போராட்டம் நடத்துவதற்காக நேற்று காலை மைசூரு வங்கி சர்க்கிளுக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அவர் சுதந்திர பூங்காவுக்கு ஊர்வலம் நடத்த முயற்சி செய்தார். அப்போது அங்கு இருந்த போலீசார் இங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறி அவரை கைது செய்து பஸ்சில் ஏற்றி சுதந்திர பூங்காவுக்கு அழைத்து வந்தனர். இங்கு மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும் என்று போலீசார் கூறினர். இதற்கு குருபூர் சாந்தகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

திடீரென மயக்கம்

அதே போல் டவுன்ஹாலில் குவிந்த கன்னட அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். அங்கு போராட்டம் நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கெம்பேகவுடா ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் சிறிய சிறிய குழுவினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் தனியாக போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதற்கு வாட்டாள் நாகராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தியபோது ஒருவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அதே இடத்தில் இன்னொருவர் தனது துண்டை பயன்படுத்தி அங்குள்ள மரத்தில் தூக்கில் தொங்க முயற்சி செய்தார். அவரை போலீசார் தடுத்து மீட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கானோர் கைது

அசம்பாவித சம்பவங்களை தடுக்க நகரின் முக்கியமான சந்திப்புகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஸ்ரீராமபுரம், ஒகலிபுரம், பிரகாஷ்நகர், அல்சூர், புலிகேசிநகர் உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் பெங்களூரு நகரில் ஆங்காங்கே போராட்டம் மற்றும் ஊர்வலத்தில் ஈடுபட முயன்ற ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர். முழு அடைப்பால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. போலீசாரின் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகளால் முழு அடைப்பு அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தத்தில் பெங்களூருவில் முழு அடைப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்