பெங்களூருவில் வேலை நிறுத்தத்தின் போது நடந்த அசம்பாவிதங்கள் தொடர்பாக 13 வழக்குகள் பதிவு
பெங்களூருவில் வேலை நிறுத்தத்தின் போது நடந்த அசம்பாவிதங்கள் தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூருவில் தனியார் வாகன போக்குவரத்து சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் பெங்களூருவில் தனியார் பஸ், ஆட்டோ, வாடகை கார்கள் ஓடவில்லை. இந்த வேலை நிறுத்தத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
ஆனாலும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்காமல் இயக்கப்பட்ட ஆட்டோக்களின் டயர்களை பஞ்சராக்கியது, வாடகை கார் மீது முட்டை வீசியது, ராபிடோ டாக்சி ஓட்டுனர்கள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றிருந்தது. இதையடுத்து, அம்சபாவித சம்பவங்களில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி, வேலை நிறுத்தத்தின் போது நடந்த அசம்பாவிதங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவங்களில் ஈடுபட்டதாக 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் கமிஷனர் தயானந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.