துணை போலீஸ் சூப்பிரண்டின் மகன் பலி

பங்காருபேட்டையில் லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகன் பலியானார்.

Update: 2023-10-04 18:45 GMT

பங்காருபேட்டை

துணை போலீஸ் சூப்பிரண்டின் மகன்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் பகுதியில் வசித்து வருபவர் தீரஜ்(வயது 21). இவரது தந்தை அனில் குமார். இவர் சித்ரதுர்காவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.

வேலை நிமித்தமாக அனில்குமார் சித்ரதுர்காவில் தங்கி உள்ளார். தீரஜ், கோலார் தங்கவயலில் தனது தாயுடன் வசித்து வந்தார். மேலும் தீரஜ் பங்காருபேட்டையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

தீரஜ் தினமும் கல்லூரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் தான் சென்று வருவார் என்று சொல்லப்படுகிறது. அதன்படி வழக்கம்போல் நேற்று காலையில் அவர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

அவர் பங்காருபேட்டை தாலுகா நீலோகெரே அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக தீரஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தீரஜ் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவ்வழியாக வந்தவர்கள் தீரஜை மீட்டனர்.

மேலும் ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் உயிருக்கு போராடிய தீரஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து பலியானார்.

பின்னர் இச்சம்பவம் குறித்து பங்காருபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் தீரஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்