போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர் தூக்கிட்டு சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக 6 பேர் மீது வழக்குப்பதிவு
போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;
சிவமொக்கா;
சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா இத்தலா கிராமம் அருகே உள்ள உனசேகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் மதன்குமார்(வயது 24). கடந்த 2019-ம் ஆண்டு இவர், அதேப்பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர், ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் சிலர், மதன்குமாரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மதன்குமார், கடந்த 15-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருகே இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த சிகாரிப்புரா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது மதன்குமார் கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னிடம், இத்தலா கிராமத்தை சேர்ந்த மஞ்சப்பா, கீதாம்மா, குருராஜ், கிரண், கரிபசம்மா மற்றும் சிவப்பா ஆகிய 6 பேர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதாக வும் குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் சிகாரிப்புரா புறநகர் போலீசார் 6 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துகொண்டனர். மேலும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.