மீண்டும் அரியானாவில், ராகுல் காந்தியின் பாதயாத்திரைமத்திய அரசு மீது கடும் தாக்கு

அரியானாவில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை மீண்டும் நேற்று தொடங்கியது.

Update: 2023-01-06 22:00 GMT

பானிபட், 

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாதயாத்திரை பல்வேறு மாநிலங்களை கடந்து கடந்த மாதம் அரியானாவை அடைந்திருந்தது. அங்குள்ள நூ, குருகிராம், பரிதாபாத் மாவட்டங்களில் 130 கி.மீ.க்கும் மேல் நடைபெற்ற இந்த பயணம், கடந்த 24-ந்தேதி டெல்லிக்குள் நுழைந்தது.

தலைநகரில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த இந்த யாத்திரை பின்னர் உத்தரபிரதேசத்துக்குள் நுழைந்தது. அங்கும் யாத்திரையை நிறைவு செய்த ராகுல் காந்தி நேற்று முன்தினம் மாலையில் மீண்டும் அரியானாவின் பானிபட்டில் நுழைந்தார்.

பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தனது தாய் சோனியாவை பார்ப்பதற்காக டெல்லி சென்றார். அங்கிருந்து மீண்டும் யாத்திரையை தொடர்வதற்காக நேற்று காலையில் பானிபட் வந்தார்.

சமூக அறிவியல் வல்லுனர்கள்

அங்குள்ள குராரில் இருந்து காலையில் யாத்திரை தொடங்கியது. இதில் ராகுல் காந்தியுடன் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நடந்து சென்றனர்.

குறிப்பாக அரியானாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களான பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா, தீபிந்தர் சிங் ஹூடா, கரண் சிங் தலால், உதய் பான், குல்தீப் சர்மா என ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

அத்துடன் பிரபல சமூக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களும் ராகுல் காந்தியுடன் பாதயாத்திரையாக சென்றனர். அந்தவகையில் பேராசிரியர் ஷெய்லா சென் ஜசனாப், ஜெய் எச்.ஜசனாப், முகமது ஆரிப் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் உரை

நாடு முழுவதும் ஏற்கனவே சலசலப்பை உருவாக்கிய வெள்ளை நிற டி-சர்ட்டை அணிந்து ராகுல் காந்தி பாதயாத்திரையில் நடந்து சென்றது மக்களின் கவனத்தை ஈர்த்தது.

மாலையில் பானிபட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் ஜி.எஸ்.டி., அக்னிபத் போன்ற விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக சாடினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வணிகத்தை அழிக்கும் ஆயுதம்

இங்கு 2 வகையான இந்தியாக்கள் உள்ளன. ஒன்று விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் வேலையில்லா இளைஞர்களை கொண்ட இந்தியா. மற்றொன்று நாட்டின் மொத்த சொத்தையும் 200 முதல் 300 பேர் வைத்திருக்கும் இந்தியா.

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. போன்றவை கொள்கைகள் அல்ல. மாறாக சிறு மற்றும் நடுத்தர வணிகத்தை அழிக்கும் ஆயுதங்கள்.

அக்னிபத் திட்டம் என்றால் என்ன என்று முதலில் எனக்கு புரிய வையுங்கள். தாங்கள் தேசபக்தர்கள் என பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். அவர்களது தேசபக்தியை எனக்கு புரிய வையுங்கள்.

21-ம் நூற்றாண்டில் வேலையில்லா திண்டாட்டத்தின் சாம்பியனாக அரியானா இருக்கிறது. நீங்கள் ஒவ்வொருவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டீர்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்