மங்களூரு விமான நிலையத்தில்ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
மங்களூரு விமான நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மங்களூரு-
மங்களூரு விமான நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மங்களூரு விமான நிலையம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, மும்பை உள்ளிட்ட உள்நாடுகளுக்கும், மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வரும் சம்பவமும் மங்களூரு விமான நிலையத்தில் அதிகரித்து வருகிறது.
இதனால், சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் தீவிரமாக பரிசோதனை செய்து வருகிறார்கள்.
ரூ.1 கோடி கடத்தல் தங்கம்
இந்த நிலையில், மங்களூரு விமான நிலையத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 16-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் சட்டவிரோதமாக கடத்தி வந்த 1 கிலோ 913 கிராம் தங்கத்தை சங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த மதிப்பு ரூ.1.08 கோடி ஆகும். இதுதொடர்பாக ஒரு பெண் பயணி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் வாய், மலக்குடலில் மறைத்து வைத்தும், காலணி மற்றும் உடலில் மறைத்து வைத்தும் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் 7 பேரும் பஜ்பே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த தகவலை மங்களூரு சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.