5 மாநில சட்டசபை தேர்தல்கள் பாதுகாப்பு பணிகள் தீவிரம்: தயார் நிலையில் 250 கம்பெனி மத்திய படைகள்
5 மாநில சட்டசபை தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்கு 250 கம்பெனி மத்திய படைகள் தயார் நிலையில் உள்ளன.
புதுடெல்லி,
சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பர் 7 முதல் 30-ந்தேதி வரை சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. மேலும் டிசம்பர் 3-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.
சத்தீஷ்கார் மாநிலத்தில் மட்டும் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல்களால் நவம்பர் 7 மற்றும் 17-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த 5 மாநிலங்களிலும் பாதுகாப்பு பணிக்காக 250 கம்பெனி மத்திய பாதுகாப்பு மற்றும் மாநில பாதுகாப்பு படைகள் ஈடுபடுத்தப்பட உள்ளன.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மாநிலங்களின் சில சிறப்பு போலீஸ் பிரிவுகள், மத்திய ஆயுத போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியவையும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படும்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை சத்தீஷ்கார் மாநிலத்தில் ஏற்கனவே இருக்கும் அதன் பிரிவுகளைத் தவிர கூடுதலாக 100 கம்பெனிகளை நிலைநிறுத்துகிறது, அங்கு நக்சலைட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுமார் 25-30 பட்டாலியன்கள் நிரந்தரமாக நிறுத்தப்பட்டு உள்ளன.